சிசிடிவியை பொருத்தும் திட்டம் தொடர்பில் சட்டத்தை உள்துறை அமைச்சு வரைந்து வருகிறது!

0
1

ஜோகூர்பாரு, செப். 10-
நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவியைப் பொருத்தவும் அதன் பயன்பாடு தொடர்பிலும் உள்துறை அமைச்சு சட்டத்தை வரைந்து வருவதாக அதன் துணையமைச்சர் டத்தோ நுர் ஜஸ்லான் முகமட் தெரிவித்தார்.

நடப்பிலுள்ள சிசிடிவி காமிராக்கள் போதுமானதாக இல்லை. நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாகவும் இல்லை. ஆகையால், ஆட்களின் முகத்தை தெள்ளத்தெளிவாக காட்டக்கூடிய மென்பொருளுடன் கொண்ட சிசிடிவி காமிராக்களை பொருத்துவதன் வாயிலாக போலீஸ் ஒரு சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் அடையாளம் காணவும் உதவுவதோடு குற்றச்செயல்கள் நிகழும் போது போலீஸ் தங்களது விசாரணைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் இது உதவும் என அவர் கூறினார்.

இதன் வாயிலாக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்ட பொது இடங்களுக்கும் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படும். அதோடு, அந்த காமிராக்களின் காட்சிகள் எச்.டி. எனும் உயர் தரத்தில் இருக்கும். இதனால், ஒருவர் குற்றச்செயலில் ஈடுபடும் போது அவரது முகம் சிசிடிவி காமிராவில் பதிவாகும் போது அவரது புகைப்படம் எப்படி தேசிய பதிவிலாகாவில் அல்லது போலீஸ் நிலையத்தில் உள்ளதோ அவ்வாறு வெளியிடப்படும். இதன் வழி போலீஸ் சம்பந்தப்பட்ட குற்றவாளியை மிக விரைவில் கைது செய்ய முடியும் என்பதோடு இந்த சிசிடிவி காணொளி பதிவுகள் நீதிமன்ற விசாரணைகளில் முக்கிய ஆதாரங்களாகவும் பயன்படுத்த முடியும் என நுர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.

இது தவிர்த்து, நாடு தழுவிய நிலையில் போலீஸ் நிலையங்களிலும் சிசிடி காமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தற்போது பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும் தற்காலிகமாக, கடை வீட்டுப் பகுதிகளில்தான் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மாறாக சாதனங்களுடன் பொருத்தப்படவில்லை.

இதில் சுபாங் ஜெயா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதைப் போன்று மற்றுமொரு சம்பவம் நிகழ அமைச்சு விரும்பவில்லை. அதனால் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையின் அடிப்படையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என நுர் ஜஸ்லான் கூறினார்.