கோலாலம்பூர் | ஏப்ரல் 21:-

புனித இரமலான் மாத உன்னதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தலைநகர், ஜாலான் ஈப்போவில் இயங்கும் புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பு பத்து தொகுதியில் உள்ள ஆறு பி.பி.ஆர். குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 2,300 பேருக்கு  அண்மையில் நோன்புக் கஞ்சியை வழங்கியது.

 பி.பி.ஆர் பத்து மூடா, பி.பி.ஆர் பெக்கான் பத்து, பி.பி.ஆர் தாமான் வாயூ, பி.பி.ஆர் பெரிங்கின், பி.பி.ஆர் ஸ்ரீ அமான் மற்றும் பி.பி.ஆர் இந்தான் பைடூரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர்கள் மற்றும் செந்தூர் பாசார் அல்-ஹிடாயா பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் இஸ்லாமிய மக்களுக்கு  நோன்புக் கஞ்சி மற்றும் இவ்வருடத்திற்கான 2,000 நாள்காட்டிகளையும்   வழங்கியதாக புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பின் தலைவர் டாக்டர் செல்வேந்திரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

 கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) மற்றும் போலீஸ் துறையின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  மலாய்க்கார நண்பர்களும்  தோள் கொடுத்ததாக அவர் மேலும் சொன்னார்.

கோவிட் 19- பெருந்தொற்றால் பல இன்னல்களை அனுபவிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உணவு  பொருட்களை வழங்குவது, வேலையிழந்தோருக்கு வேலை வாய்ப்பைத் தேடித் தருவது போன்றவற்றில் இந்த அமைப்பு கவனம்  தற்போது செலுத்தி வருகிறது.

பி 40 மக்களின் நலன்கள் மீது  புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இவர்களுக்கு உதவும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

அதே சமயம், மாற்றுத் திறனாளிகளுக்காக இந்த அமைப்பு 36 சக்கர  நாற்காலிகளை வாங்கியிருப்பதாகவும் அவை தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் செல்வேந்திரன் விவரித்தார்.

சுற்று வட்டார மக்களின் நலனுக்காக புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பு தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.