கோலாலம்பூர் | ஏப்ரல் 23:-

கோவிட்-19 தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், மாநில எல்லைகளைக் கடக்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை.

கோவிட்-19 அதிகரிக்க முக்கியக் காரணங்களில் ஒன்றாக விளங்கும் மாநில எல்லையைக் கடக்கும் அனுமதிக்கானத் தடை இன்னும் நீடிப்பதாக பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இந்த முடிவு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதற்கானத் தடையை நீட்டிப்பதாக அவர் சொன்னார்.

இந்திய நாட்டின் தற்போதையக் கோவிட்-19 நிலவரத்தைச் சுட்டிக் காட்டிய அவர், அன்றாட நேர்வுகள் 200,000த்தைத் தாண்டியதையும் அதன் தலைநகரமான டில்லியில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளும் திருமண மண்டபங்களும் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டார்.

மலேசியாவும் அந்த நாடுகளைப் போல் மாறிவிடக்கூடாது. எனவே, சுயக் கட்டுப்பாட்டையும் எஸ்.ஓ.பி.யையும் பொது மக்கள் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.