கோலாலம்பூர் | ஏப்ரல் 23:-

தேசிய முன்னணி ஆதரவுக் கட்சியான மலேசிய இந்தியர் மேம்பாட்டு முன்னணி – ஐபிஎஃப் ம.இ.கா.விடன் ஒத்துழைக்க முடியாது என அறிவித்துள்ளது.

தே.மூ.வின் இதர உறுப்பியக் கட்சிகளை ம.இ.கா. தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் துரோகிகள் எனக் கருத்துரைத்த பின்னர் ஐபிஎஃப் இவ்வாறு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் தேசிய முன்னணியின் மற்றக் கட்சிகளான அம்னோ, மசீச கட்சிகளுக்குத் தமது ஆதரவு இருப்பதாக ஐபிஎஃப்-இன் தலைவர் லோகநாதன் தெரிவித்தார்.

ம.இ.கா. இன்னும் எங்கள் நண்பர் தான். ஆனால், அக்கட்சியுடன் ஒத்துழைக்க மாட்டோம். இந்த முடிவை ஐபிஎஃப்-இன் உட்டமன்றக் கூட்டம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இம்முடிவு தொடர்பான எந்தப் புதிய அறிவிப்பும் (ஒரு வேளை இருந்தால்) நாடாளுமன்றம் கலைத்த பின்னர் அறிவிக்கப்படும்.

இம்மாதத் தொடக்கத்தில் நடந்து முடிந்த ம.இ.அகா.வின் 74வது பொதுப் பேரவையில் உரையாற்றிய தான் ஶ்ரீ விக்னேஸ்வரன், கடந்த பொதுத் தேர்தலில் தே.மு.வுக்கு ஆதரவளிக்கும் மற்ற கட்சிகள் ம.இ.கா.வுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகக் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.கா.வுக்கு எதிரான சில கட்சிகளுடன் அம்னோ இன்னும் ஒத்துழைப்பு வழங்கி உறவாடுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர் எஸ் தனேந்திரன், தேசிய முன்னணியில் ம.இ.கா.வுக்கு அக்கட்சி மாற்றாக அமையத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியும் ஐபிஎஃப்-உம் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்து உறுப்புக் கட்சிகளாக இணைந்ததைத் தொடர்ந்து ம.இ.கா அதனை எதிர்த்துள்ளது.

இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியின் மீது பகைமைக் கொண்டிருக்கும் ம.இ.கா.வின் முடிவைக் கண்டு தாம் வருத்தம் அடைவதாக லோகநாதன் குறிப்பிட்டார்.

எங்களுக்கு உதவிய அம்னோவுக்கும் மசீசவுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், எங்களுக்குத் தடையாக ம.இ.கா. தற்போது உள்ளது.

இருந்தாலும், ம.இ.கா.வுக்கு மாற்றாக நாங்கள் இருக்க எண்ணம் கொண்டிருக்கவில்லை. தே.மு.வில் நாங்களும் ஒரு அங்கத்தினராக இருக்க விரும்புகிறோம்.

இதனிடயே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐபிஎஃப் போட்டியிடவும் தனது எண்ணத்தைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட அம்னோவிடம் கேட்டுள்ளதாகவும் அந்தக் கோரிக்கைக்கு அம்னோ வாய்மொழியாக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் லோகநாதன் குறிப்பிட்டார்.