கோலாலம்பூர் | ஏப்ரல் 24:-

கல்வி நிலையங்களில் கோவிட்-19 நேர்வுகள் அதிகரித்த விவகாரத்தில் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

கல்வி நிலையங்களில் அதிகரித்துள்ள கோவிட்-19 நேர்வுகளுக்கு பள்ளிகள் அவசர அவசரமாகத் திறந்தது தான் காரணம் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரன்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக சனவரி 13ஆம் நாள் மூடப்பட்டப் பள்ளிக் கூடங்கள் கட்டங் கட்டமாக மார்ச் மாதம் திறக்கப்பட்டன.

கல்வி நிலையங்களைத் தொடர்புப் படுத்திய திரள்களைக் கண்டு பெற்றோர்களும் மாணவர்களும் தற்போது மிகுந்த பதற்றத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகி இருக்கிறார்கள் எனக் கூறுகின்றானர்.

வீட்டிலிருந்தவாறே கற்றல் கற்பித்தல் பற்றி அறிவித்த சில நாட்களிலேயே கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் எஸ்.ஓ.பி. குறித்த எந்தவிதமான விளக்கமும் முழுமையாக வழங்கப்படாமலேயே பள்ளிகள் திறக்கப்பட்டதாக அவர்கல் மேலும் சொன்னார்கள்.

கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டப் பள்ளிகள் குறைந்தது 2 நாட்களுக்கு மூடப்படும் என கல்வித் துணை அமைச்சர் மா ஹாங் சூன் அறிவித்திருந்தார்.

இதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை மட்டும் சில பள்ளிகள் மூடியுள்ளன.

பள்ளிகளில் கோவிட்-19 பரவல் அதிகரித்துல்ள நிலையில் அதனை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் பள்ளிகள் தவிக்கின்றன. ஒரு வேளை, பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு இணையவழிக் கற்றல் கற்புத்தல் நடப்புக்கு வந்தாலும் பள்ளிகள் தயார்நிலையில் இல்லை.

மேலும், அவ்வாறான சூழலை கையாள பொது மக்களுக்கு முழு விளக்கமும் வழங்கப்படவில்லை.

எனவே, கல்வி அமைச்சர் முகம்மட் ராட்ஸி ஜிடினும் அவரது இரு துணை அமைச்சர்களுமான மா ஹாங் சூன்-உம் முஸ்லிமின் யாஹ்யாவும் பதவி விலக வேண்டும் என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்ப்பார்க்கப்பட்ட மாதிரி அவர்கள் தங்களின் பொறுப்பை செவ்வனே செய்யவில்லை. எனவே, நாட்டின் எதிர்காலம் கருதி அவர்கள் பதவி விலக வேண்டும்.

அந்தக் கூற்றை உள்ளடக்கிய அறிக்கையை முன்னாள் கல்வி அமைச்சரும் சிம்பாங் ரெங்காம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் நம்பிக்கைக் கூட்டணியின் கல்வி செயற்குழுவின் தலைவருமான மஸ்லி மாலிக் கையெழுத்திட்டுள்ளார்.

அதே அறிக்கைக்கு ஆதரவு அளித்து பின்வரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

நிக் நாஸ்மி அகமாட் (செத்தியாவங்சா – பிகேஆர்)
ஹசான் பஹாரோம் (தம்பின் – அமானா)
தியோ நி சிங் (கூலாய் – டிஏபி – முன்னாள் கல்வி துணை அமைச்சர்)
வில்ஃப்ரெட் மாடியூஸ் தாஙௌ (துவாரான் – அப்கோ)
சேட் சாடிக் அப்துல் ரஹ்மான் (மூவார் – மூடா)
அமிருடின் ஹம்ஸா (கூபாங் பாசு – பெஜுவாங்)
அகமாட் ஹஸான் (பாப்பார் – வாரிசான்)

சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா வழங்கிய தகவலின்படி, சனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரையில் 4,868 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.