மென்செஸ்டர், செப்.11 –

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு திரும்பும் மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் அதிரடி படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதன் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வரை அதிரடிப் படைத்து வந்த மென்செஸ்டர் யுனைடெட், சிர் அலெக்ஸ் பெர்கூசன் நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டப் பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்றது.

லுயிஸ் வான் ஹால் நிர்வாகத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் போட்டியில் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் கடந்த ஆண்டில் யூரோப்பா லீக் கிண்ணப் போட்டியில் விளையாடியது.எனினும் ஜோசே மொரின்ஹோ நிர்வாகி பொறுப்பை ஏற்ற பின்னர் மென்செஸ்டர் யுனைடெட் கடந்த பருவத்தில் யூரோப்பா கிண்ணத்தை வென்றது.

யூரோப்பா கிண்ணப் போட்டியின் நடப்பு வெற்றியாளர் என்ற முறையில் மென்செஸ்டர் யுனைடெட் இம்முறை சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு நேரடியாக தேர்வுப் பெற்றுள்ளது. நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் ஏ பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் சுவிட்சர்லாந்தின் எப்.சி பேசல் அணியை சந்திக்க விருக்கிறது.

ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் மீண்டும் சாம்பியன்ஸ் லீக் பாடல் ஒலிக்கவுள்ள வேளையில், மென்செஸ்டர் யுனைடெட் மீது அதன் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் எப்.சி போர்ட்டோ அணியை ஓல்ட் டிரப்போர்ட் அரங்கத்து கொண்டு வந்த மொரின்ஹோ வெற்றியுடன் போர்ச்சுகல் திரும்பினார். 2013 ஆம் ஆண்டில் ரியல் மெட்ரிட் நிர்வாகியாக ஓல்ட் டிரப்போர்ட் அரங்கத்துக்கு வந்தபோதும், மொரின்ஹோ வெற்றி கனியைப் பறித்தார்.

இம்முறை மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மொரின்ஹோ வெற்றிப் பெறுவார் என அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.