புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > டாக்சி தொழில்துறை உருமாற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

டாக்சி தொழில்துறை உருமாற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

பெட்டாலிங் ஜெயா, செப். 11-
டாக்சி ஓட்டுநர்களிடையே டாக்சி தொழில்துறை உருமாற்றுத் திட்டம் (டிஐடிபி) பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தரை பொது போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்) அதுபற்றிய 1,500 துண்டுப் பிரசுரங்களைத் கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்றுப் பகுதிகளில் விநியோகம் செய்தது.

இந்தத் துண்டுப் பிரசுரத்தில் அரசாங்கம் கடந்த 2016 முதல் வரும் 2021 வரையில் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவிருக்கும் 11 திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் உட்பட இன்னும் பல தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

கேஎல் சென்ட்ரல், கேஎல்சிசி, எல்ஆர்டி ஸ்ரீ ரம்பாய், புடு ராயா உட்பட பவிலியன், புக்கிட் பிந்தாங், ஒருங்கிணைந்த தெற்கு முனையம் (டிபிஎஸ்), புத்ராஜெயா, புக்கிட் ஜாலில் ஆகியவற்றில் விநியோகிக்கப்பட்டது மட்டுமின்றி தீபகற்ப மலேசியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதாக ஓர் அறிக்கையில் நான்சி குறிப்பிட்டார்.

முன்னதாக ஸ்பாட் வரைந்த இந்த டிஐடிபி திட்டம் அமைச்சரவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டம் 4 முக்கியக் கொள்கைகள் அடிப்படையின் கீழ் டாக்சி தொழில்துறையில் நீண்ட காலமாக உள்ள பிரச்னைகளைத் தீர்க்க 11 ஊக்குவிப்புத் திட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.
இதில் தொழில்நுட்பப் பயன்பாடு, போட்டித்தன்மையை ஊக்குவித்தல், டாக்சி ஓட்டுநர்களிடையே நியாயமான மற்றும் சமமான போட்டியை உருவாக்குதல், டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் மற்றும் சமூகநலன்களை அதிகரித்தல், கட்டண விகிதத்தை மறுஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும்.

அதோடு மட்டுமின்றி இந்த டிஐடிபி வாயிலாக டாக்சி தொழில்துறையை மேம்படுத்தி ஒற்றை ஓட்டுநர் கார்டை வெளியிட்டு கண்காணிக்க ஸ்பாட்டுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் காப்புறுதிப் பாதுகாப்பு உட்பட பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை மின்னியல் டாக்சி ஓட்டுநர்களும் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய விதிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன