சென்னை | மே 7:-

தமிழகத்தின் 23-வது முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

தன்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலையும் அப்போது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.

காலை 9.00 மணியளவில் கவர்னர் மாளிகை வந்த மு.க ஸ்டாலின், ஆளுநருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர், அமைச்சர்களை கவர்னருக்கு மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். இதையடுத்து, நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.

இதன்பின்னர், தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” எனக்கூறி மு.க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி நியமனம் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். மு. க ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.