கோலாலம்பூர் | மே 22:-

கே.பாலமுருகன் இயக்கத்தில் உருவான இரண்டு குறும்படங்கள் அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் ஏழு விருதுகள் பெற்றுள்ளன.

ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகன் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இயக்கிய No Exit, The Lock ஆகிய இரு குறும்படங்களும் அண்மையில் உலகத் திரைப்பட விழாக்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன.

No Exit குறும்படத்தில் சிறுவர் பாத்திரத்தில் நடித்த சர்வீன்ராஜுக்கு சிறந்த சிறுவர் நடிகருக்கான பிரிவில் மோக்‌ஷா அனைத்துலக விருது 2021 கிடைத்துள்ளது. Mokkho International Film Festival என அறியப்பட்ட அத்திரைப்பட விழாவில் கே.பாலமுருகன் இயக்கிய The Lock என்கிற குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான மோக்‌ஷா 2021 தங்க விருதைப் பெற்றுள்ளது.

அதோடுமட்டுமல்லாமல் No Exit என்கிற குறும்படத்தை இயக்கியமைக்குச் சிறந்த குறும்பட இயக்குனர் விருதையும் கே.பாலமுருகன் பெற்றுள்ளார்.

The Lock குறும்படத்திற்கான கதையை எழுதியமைக்காக கே.பாலமுருகன், மு.சுந்தரேஸ்வரன் ஆகியோர்களுக்குச் சிறந்த எழுத்தாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே திரைப்பட விழாவில் நான்கு விருதுகள் பெற்ற குழுவாக மலேசியாவைச் சேர்ந்த இக்குறும்படங்கள் வெற்றி வாகைச் சூடியுள்ளன.

மேலும், No Exit குறும்படம் கீழ்க்கண்டவாறு உலகத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி வெற்றிப் பெற்றுள்ளது.

Official Selection:

1.Sasee Film Awards 2021
2.Uruvatti International Film Festival, Pondicherry
3.International Mokkho Film Festival
4.Indo French International Film Festival
5.Golden Short Film Festival
6.Tagore International Film Festival, India
7.Golden Bridge Istanbul Short Film Festival

Winner/ விருது

-Best Child Actor, Golden Moksha Award 2021/ சிறந்த சிறுவர் நடிகர் விருது
-சிறந்த சிறுவர் சினிமா விருது, Uruvatti International Film Festival
-சிறந்த சிறுவர் சினிமா விருது, Sasee Film Awards 2021
-சிறந்த மௌனக் குறும்பட விருது, Indo French International Film Festival

The Lock குறும்படம் கீழ்க்கண்டவாறு உலகத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி வெற்றிப் பெற்றுள்ளது:

Official Selection/உலகத் திரைப்பட விழாவில் தேர்வு

1.Sasee Film Awards 2021
2.Uruvatti International Film Festival, Pondicherry
3.International Mokkho International Film Festival

Semifinalist/ அரையிறுதி சுற்றில் தேர்வு

Stockholm City Film Festival 2021

Winner/ விருது

-Best Drama Short Film Of 2021
Golden Moksha Award/ சிறந்த குறும்படம் 2021
-சிறந்த ஒளிப்பதிவு, Uruvatti International Film Festival
-சிறந்த ஒளிப்பதிவு, Sasee Film Awards 2021

2018 ஆம் ஆண்டு முதல்தான் முறையாக குறும்படங்களை இயக்கும் பயிற்சிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டதாக எழுத்தாளரும் நாவலாசிரியருமான திரு.கே.பாலமுருகன் தெரிவித்தார். தமது சிறுகதைகளைக் குறும்படமாக்குவதற்கான திரைமொழி பயிற்சியினை நோக்கிய தன் பயணத்தில் இவ்வாண்டு கிடைத்திருக்கும் வெற்றி தம்மை உற்சாகப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

மலேசியால் குறிப்பிடத்தக்க சிறந்த எழுத்தாளர்களுள் கே.பாலமுருகன் அவர்கள் பல கவனிக்கத்தக்க முயற்சிகளையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருபவர் ஆவார். குறும்படத் துறையில் இதுவே அவரின் முதல் சர்வதேச சாதனைகள் என அடையாளப்படுத்தலாம். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் நடத்திய தேசிய அளவிலான குறும்படப் போட்டியில் கே.பாலமுருகன் இயக்கிய கவசம் என்கிற குறும்படம் இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

அவருடைய இவ்விரண்டு குறும்படங்களிலும் காட்சியாக்கமும் சிறுவர் கதைமாந்தரை உருவாக்கிய விதமும் கவர்வதாகத் திரைப்பட விழாக்களில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. மலேசிய நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை மேலும் அழுத்தமாக இணைத்துக்கொண்டால் கே.பாலமுருகன் எனும் குறும்பட இயக்குனர் அடுத்தக்கட்ட இலக்கை அடைவார் என்றே மோக்‌ஷா குறும்பட விழாவின் தலைமை நடுவர் கருத்துரைத்திருந்தார்.

சிறுவயது முதலே தன்னுடைய நினைவாற்றலை மதிப்பிடுவதற்குச் சினிமாவின் பெயர்களையே வீட்டில் சொல்லிக் கேட்பார்கள் என்று பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் பாலமுருகன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம்தான் திரையரங்கில் தான் பார்த்த முதல் படம் என்றும் குட்டையான கமல் திரையில் தோன்றியதும் நாற்காலியின் மீது ஏறி கைத்தட்டி ஆரவாரம் செய்ததாகவும் இன்றும் வீட்டில் நினைவுக்கூர்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சினிமாவுக்குமான தனக்குமான உறவு இலக்கிய ஈடுபாட்டிற்குப் பின்னரே வலுப்பட்டதென சர்வதேச குறும்பட விழாக்களில் ஏழு விருதுகளை வென்ற கே.பாலமுருகன் தன் மன உணர்வை வெளிப்படுத்தினார்.

No Exit – வெளியேற வழியில்லை

சிறுவர்கள் கடத்தப்படும் சமூகக் குற்றவியலுக்குப் பின்னணியில் உள்ள தனிமைப் போராட்டத்தை வசனங்கள் இன்றி காட்டிய குறும்படம். வசனங்கள் இன்றி காட்சிகளின் ஊடாகவே ஒரு முழுக் கதையும் சொல்லி முடிக்கும் சவாலைத் தான் ஏற்றுக் கொண்டு இக்குறும்படத்தை இயக்கியதாக கே.பாலமுருகன் தெரிவித்தார். மேலும், இக்குறும்படத்தில் நடித்த சிறுவர் நடிகரான சர்வீன்ராஜ் தனது முழு உழைப்பையும் செலுத்தி நடித்திருப்பதே இப்படைப்பிற்கான வெற்றி எனக் கூறினார்.

The Lock- பூட்டு

வயதானவர்கள் மீது குடும்பம் செலுத்தும் அடக்குமுறைகளைக் காட்டிய குறும்படம். த்.எச்.ஆர் ராகா நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த பத்தில் இக்குறும்படம் தேர்வாகியிருந்தது.