கோலாலம்பூர் | மே 27 :-

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது இரவு 8.00 மணிக்குப் பின்னர் பொது மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என அரசாங்கம் ஆணையிடவில்லை.

அண்மையில் இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரையில் பொது மக்கள் வெளியில் இருந்ததால் அவர்களுக்கு அதிகாரத்துவத்தினர் தண்டம் விதிக்காப்பட்டப் பல சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டு வந்துள்ளது.

இம்முறை நடப்பில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கடுமையாக்கப்பட்ட விதிமுறையின்படி, இரவு 8.00 மணி வரை மட்டுமே வணிகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், கிளினிக்குகளும் மருந்தகங்களும் இரவு 10.00 மணி வரையிலும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைப்படி பொது மக்கள் இரவு 8.00 மணிக்குப் பிறகு வெளியில் இருக்கலாமா முடியாதா என எவ்விதக் கூற்றும் தெரிவிக்கப்பட்டவில்லை.

“ஊரடங்கு கிடையாது. வணிகங்கள் செயல்படும் நேரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மருந்தகங்கள் இரவு 10.00 மணி வரை இயங்கலாம். தனியார் கிளினிக்குகள் தங்களின் வசதிக்கேற்ப இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சில மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் இரவு 11.00 மணிக்கு வேலை நேரம் முடியலாம் என மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

அண்மையில், காலை 8.00 மணிக்கு முன்னர் பொது மக்கள் வெளியில் நடமாடினால் ரி.ம. 2,000 தண்டம் விதிக்கப்படலாம்  எனக் காவல்துறை அதிகாரி கூறுவது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

அது முற்றிலும் உண்மையில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அந்தக் காணோலியில் உள்ள ஆடவருக்கு தண்டம் விதிக்கப்படவில்லை என ஷா ஆலாம் மாவட்டக் காவல்துறை தலைவர் பஹாருடின் மாட் தயிப் தெரிவித்துள்ளார்.

ஷா ஆலாம், செக்‌ஷன் 31, ஜாலான் பெர்சியாரான் அங்கரிக் எரியாவில் உல்ள சால்லைத் தடுப்புச் சோதனையில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொலியில் சம்பந்தப்பட்ட ஆடவருக்கு அந்தக் காவல்துறை அதிகாரி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகள் குறித்து விளக்கமளிப்பதாக மட்டுமே இருந்தது என அவர் சொன்னார்.

இரவு 8.00 மணிக்குப் பிறகோ அல்லது காலை 8.00 மணிக்கு முன்னர,  எந்த வாகனமும் சாலையில் இருக்கக் கூடாது என்ற விதிமுறையை வெளியிடப்படவில்லை என அவர் மேலும் கூறினார்.