சுங்கை சுப்புட், மே 30-

மஇகாவின் 10ஆவது தேசிய தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற்ற மாண்புமிகு தான் சிறி டத்தோ சிறி விக்னேசுவரன் சன்னாசி அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமது புரட்சி வாழ்த்துக்களை பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

மலேசிய தமிழினத்தின் தாய் கட்சியான மஇகாவின் அடிமட்ட தொண்டனாக தனது அரசியல் பயணத்தை தொடங்கி, எத்தனையோ சவால்களை கடந்து, கட்சியின் பலவீனமான சூழ்நிலையிலும் தன்மான சிங்கமாக தலைமையேற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அதிரடி மாற்றங்கள் வழி மலேசிய தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மஇகாவை பலமான கட்சியாகவும் உருமாற்றியிருக்கிறார் என்பதே உண்மை என்றார்

அதிலும் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவரானாலும் அவர்களுக்கு சமுதாய தலைவனாக தன்னலமற்ற சேவையை வழங்குபவராகவும் தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழ்ச் சமயம், தமிழர் பண்பாடு போன்ற தமிழியல் பற்றியங்களின் மீட்சிக்கு அரணாகவும் துணையாகவும் அரசியல் வழியாகவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வழியிலும் செயலற்றி வருவதை கண்டு வியக்கிறோம்.

இதுபோல எந்த அரசியல் கட்சிகளின் சமுதாய தலைவர்களானாலும் தமிழர் இன எழுச்சிக்கு கட்சிகளை கடந்து பணியாற்ற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கும் வேளையில், மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகாவின் தேசியத்தலைவர் மாண்புமிகு தான் சிறி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்களை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் பதிவு செய்வதாக தமது அறிக்கையில் பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்