சென்னை, ஜூன் 1-

தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் முழு ஊரடங்கு கூடிய விரைவில் முடிவிற்கு வருமென தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொலியில்..

கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள் மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24-ந்தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ஆம்தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் 7 ஆயிரம் வரை எட்டிய பாதிப்பு, இப்போது 2 ஆயிரமாக குறைந்து விட்டது. இன்னும் ஒருசில நாட்களில் முழுமையாகக் குறைந்து விடும்.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.

எனவே, கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்புவோம் என்றார் அவர்.