சென்னை : ஜூன் 3 :-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை (இன்று) முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மேலும், கோவிட்-19 பாதிப்பு நிவாரண நிதியுதவியான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.8 கோடி பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசு அறநிலைய துறையின் கீழ் ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.

இதனையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டப் பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி வழங்கும் திட்டமும், திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டமும், மருத்துவர்கள், காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 2.8 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் கிடைக்க தமிழக அரசு  சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக  டோக்கன் வழங்கியுள்ளனர். தினசரி 200 பேருக்கு வருகிற 5ம் தேதி  முதல் ரேஷன் கடைகளில் இந்த நிவாரண உதவிகள் கிடைக்கும். இதற்காக கடந்த சில நாட்களாக மளிகை பொருட்களை பேக்கிங் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் கோவிட்-19 நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நாளை வரை நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தவறாது அவற்றை பெற்றுக் கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நன்றி : தினகரன்