வாஷிங்டன் | ஜூன் 3 :-

அமெரிக்காவில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பீர் இலவசம் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 63 விழுக்காட்டினருக்கு முதல் டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை 4ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் அதற்குள் 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இலவச பீர், விளையாட்டு போட்டிகளுக்கு இலவச நுழைவுச் சீட்டு, தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுபவர்களை இச்சலுகைகள் மூலம் மனம் மாற்றிவிடலாம் என அமெரிக்க அரசு எதிர்பார்க்கிறது.

தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலவச சலுகைத் திட்டங்களை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது தவிர துணை அதிபர் கமலா ஹாரிஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.