கோலாலம்பூர் | ஜூன் 3:-

பொதுமுடக்கக் காலத்தில் உயர்கல்விக் கழக மாணவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் எண்ணிலடங்கா. அவற்றைக் கருத்தில் கொண்டு நாம் தமிழர் கட்சியின் முழு அதிகாரம் பெற்ற மலேசியக் கிளையான மலேசியச் செந்தமிழர்ப் பேரவை அம்மாணவர்களுக்கு உணவு உதவிகள் வழங்கும் முயற்சியைத் தற்போது மேற்கொண்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள உயர்கல்விக் கூட மாணவர்கள் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நிதிச் சுமை, நடமாட்டக் கட்டுப்பாடு உள்ளிட்ட கரணியங்களால் உணவுப் பொருள்கள் வாங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் இன்னல்களை உணர்ந்து மலேசியச் செந்தமிழர்ப் பேரவை இவ்வரிய முயற்சியை மேற்கொண்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் தியாகு லோகநாதன் கூறினார்.

மலாயாப் பல்கலைக்கழகம், மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகம், மலேசிய பகாங் பல்கலைக்கழகம், சைபர் சயா பல்கலைக்கழம் முதலிய உயர்கல்விக் கூடங்களுக்கு உணவுப் பொருள்களை அனுப்பப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். நாடு நெடுகிலும் உள்ள உயர்கல்விக் கூட தமிழ், இந்திய மாணவர்கள் உணவுப் பொருள்கள் தொடர்பான உதவி தேவைப்பட்டால் தம்மை 016 6285288 எனும் தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாய தோழர் தியாகு லோகநாதன் கேட்டுக்கொண்டார்.