கோலாலம்பூர் | ஜூன் 4 :-

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் கடந்த மே 25 முதல் நேற்று வரை அதன் விதிமுறைகளை மீறியதாக மனித வள அமைச்சிடம் 1,120 புகார்கள் அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணன், முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளைக் கூடுதல் நேரம் வேலை செய்யச் சொல்வதும். குறிப்பிட்ட எண்ணிக்கையினரைக் காட்டிலும் அளவுக்கு அதிகமானத் தொழிலாளர்களை அனுமதிப்பதும் அக்குற்றங்களில் அடங்கும் என்றார்.

தாம் பெற்ற அவ்வனைத்துப் புகார்களையும் மனிதவள இலாகா வாயிலாக விசாரிக்கப்படுவதாகவும் அதற்கான அதிகாரத்தை தேசியப் பாதுகாப்பு மன்றம் வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாளிகளுக்கு ரி.ம. 50,000 தண்டம் விதிக்கப்படும்.

இந்தக் கடுமையானக் காலக் கட்டத்தில் முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக குறுக்கு வழியில் நடந்து கொள்ள வேண்டாம். நடவடிக்கை எடுக்கும் நிலையில் அரசாங்கத்தைக் குறை கூறக்கூடாது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்குமானது. அரசாங்கத்தையும் அமைச்சுகளையும் மட்டுமே நம்பி இருக்க முடியாது.

வேலை இடங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் ஆணையிடும்போது, அதனை முழுதாய்க் கடைபிடியுங்கள் என டத்தோ ஶ்ரீ சரவணன் நினைவுறுத்தினார்.

தொழில்துறைகள் இயங்க அனுமதிக்கப்படும் COVID-19 Intelligent Management System (CIMS) 3.0 க்கும் மனிதவள் அமைச்சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார். ஆனால், எஸ்.ஓ.பி.யை மீறும் நிறுவனத்தை மூடச் சொல்லும் அதிகாரம் இருப்பதாக விளக்கினார்.

மேலும், சட்டம் 446 குறித்து பேசிய டத்தோ ஶ்ரீ சரவணன், தற்போது தமது தரப்பு 19,010 முதலாளிகளை உடப்டுத்திய 106,593 வேலையிடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது வரையில் 742 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 125 வழக்குகள் சட்டம் 446 இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.

49 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரி.ம. 352,000 தண்டம் விதிக்கப்பட்டுள்ளன.