கோலாலம்பூர் | ஜூன் 4:-

கோவிட்-19 பெருந்தொற்றைத் தவிர்த்து தற்பொழுது இந்தியர்களை அச்சுறுத்தி வருவது காவல்துறை தடுப்புக் காவலில் மரணச் சம்பவங்களாகும். இதில் தற்பொழுது புதிதாக இணைந்திருப்பது கிள்ளான் செலாத்தான் காவல்துறைத் தடுப்புக் காவலில் இறந்த இந்திய முசுலிம் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ம.இ.கா.வின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தடுப்புக் காவலில் அழைத்துச்ச் எல்லப்பட்ட ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாகக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மேலும், தடுப்புக் காவல் மரணச் சம்பவத்தில் இது முதல் முறை அல்ல.

என்னதான் நடக்கிறது ? பல கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இது குறித்து பொது மக்களைக் காவல்துறை குறை கூற முடியாது. மேலும், இதன் தொடர்பில் கேள்வி எழுப்பும் அரசியல் வாதிகளின் கேள்விகளை புறந்தள்ளவும் முடியாது. காரணம் தற்சமயம் இது நாட்டின் மிக முக்கியப் பிரச்சனையாகவும் கட்டுப்படுத்த  முடியாத ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.

இறந்தவரின் குடும்பத்தார் மனதில் பல்லாயிரக்கணக்கான எண்ணவோட்டங்கள். எவ்வாறு அவர் இறந்திருப்பார் ? பல கேள்விகளும் படு மோசமான கற்பனைகளும் அவர்களின் எண்ணத்தில் குடி கொண்டிருக்கும். இதனை காவல்துறையினர் தவறு எனக் கூறவே முடியாது. தடுப்புக் காவலுக்காகக் கைது செய்யப்படுபவர் முழுக்க முழுக்க காவல்துறையினரின் பொறுப்பாவர் என தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

கைது செய்யப்பட்டு தென் கிள்ளான் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஒரே நாளில் உமார் ஃபாருக் அப்துல்லா @ ஹேமநாதன் (வயது 36) நேற்று உயிரிழந்துள்ளார்.

கோலா சிலாங்கூரில் உள்ள தங்களின் வீட்டிற்கு 5 காவல்துறை அதிகாரிகள் உமாரைக் கைது செய்ய மாலை 4.00 மணி முதல் மாலை 5.00க்குள் வந்ததாக உமார் ஃபாருக் அப்துல்லாவின் மனைவியான ஹுமைரா அப்துல்லா @ கண்ணகி (வயது 25) கூறினார்.

மறுநாள் காலை 10.00 மணி அளவில் ஹுமைராவுக்குக் காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் அவ்வழைப்பில் தமது கணவர் எதுவுமே சாப்பிடவில்லை எனவும் கூறப்பட்டது.

தகவலரிந்து கிள்ளான் செலத்தான் வந்தடைந்த ஹுமைராவைக் காத்திருக்கச் சொன்னார்கள். வெகு நேரம் காத்திருந்த ஹுமைராவை நோக்கி பிற்பகல் 3.30 மணியளவில் ஒரு காவல் துறை அதிகாரி வந்து அவரது கணவர் கிள்ளான் செலாத்தான் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த உமார் மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் இருந்த ஒருவர் எவ்வாறு  திடீரென மரணித்தார் ? கொடுக்கப்பட்ட அந்தக் காரணம் பல்வேறு குழப்பங்களை வித்திடுகிறது. மேலும், தடுப்புக் காவலில் எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் இல்லையா ? எனத் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பொது மக்கள் எழுப்பும் பலதரப்பட்டக் கேள்விகளுக்குக் காவல்துறை கோபப்படக் கூடாது. முறையானக் கட்டுப்பாடுகள் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தத் தடுப்புக் காவல் மரணத்தை நிச்சயம் காவல்துறை தடுத்திருந்திருக்க முடியும்.

எனவே, தேசியக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா முன் வந்து தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் குறித்து கடுமையாக்கபப்ட்டச் சட்டத்தை இயற்றி மேலும் சர்ச்சைகளையும் சச்சரவுகளையும் தீர்க்க வழி செய்ய வேண்டும் என தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

மேலும், தமது தரப்பு நேரடியாகவே தேசியக் காவல்துறைத் தலைவர், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் ஆகியோரை மிக விரைவில் சந்திக்கவும் உள்ளார் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.

காவல்துறை மீது தமக்கு நம்பிக்கை இருந்தாலும் தற்பொழுது பொது வெளியில் நிலைமை சற்றி எதிர்ப்பாராத விதமாகத்தான் உள்ளது. இருந்தும் இது போன்ற தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் நடக்கக் கூடாதவை. தற்பொழுதுள்ளச் சூழலை மாற்றியமைக்கும்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என தான் ஶ்ரீ விக்னேஸவரன் வலியுறுத்தினார்.

உமாரின் மரணம் முதல் சம்பவமல்ல. கடந்த 2017ஆம் ஆண்டு இதே காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும்போது மருத்துவப் பிரச்சனையால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஜி. கணேஷ்வரன் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.