கோலாலம்பூர், செப். 12-

தமிழ்மலர் நாளிதழில் வெளிவந்த செய்தி குறித்து டத்தோ சரவணன் விளக்கம் கேட்க சென்றபோது, அங்கே பிரச்னைகள் எழுந்ததும், ஓம்ஸ் தியாகராஜன் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் டத்தோ சரவணனுக்கு எதிராகவும் ஊடகத்தின் சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், நாளை அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி புத்ராஜெயாவில் மிக பெரிய கண்டன போராட்டம் நடக்கவிருக்கின்றது.

இதில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு, பிரதமர் அலுவலகத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக மகஜரையும் வழங்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த கண்டன போராட்டத்தில் வன்னியர்களின் பலத்தை காட்ட வேண்டுமென நேஷ்னல் வன்னியர் சங்கம் எனும் வாட்சாப் குரூப்பில் பேசப்பட்டுள்ள செய்தி தற்போது வைரலாக பரவ தொடங்கியுள்ளது.

நாளிதழின் சுதந்திரம் என கூறிவிட்டு, வன்னியர் சங்க உறுப்பினர்களை இந்த போராட்டத்திற்கு அழைத்து வரும் நோக்கத்தை இந்த நடவடிக்கை கொண்டிருப்பதாக பலர் சமூக தளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மலேசியாவில் சாதி சங்கஙளின் நடவடிக்கை மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. அதனால் இந்த விவகாரம் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

வன்னிய சங்க வாட்சாப்பில் சரவணனை முடிக்க வேண்டும். பின்னர் ம.இ.கா. தலைமையகத்திற்கு சென்று, பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டுமென ஒருவர் கூறுகிறார். அதற்கு மற்றொருவர் அய்யா என்ன சொல்கிறாரோ அதை செயல்படுத்துவோம். இதை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என கூறுகிறார். இந்த குரல் பதிவும் தற்போது வாட்சாப்பில் வைரலாக பரவ படுகின்றது.

மலேசியாவிலும் சாதிச் சண்டையா? என பலர் வெளிப்படையாகப் பேச தொடங்கியுள்ளார்கள். சரவணனுக்கு எதிரான இந்த போராட்டம் திசை மாறிச் செல்கிறதா? என்ற கேள்வியும் எழுகின்றது.