கோலாலம்பூர் | ஜூன் 13:-

மக்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் நிதி உதவியாக ரி.ம. 500இல் இருந்து ரி.ம. 2,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணியின் மக்கள் வாழ்க்கைச் செலவின செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும் 14 நாட்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டதை நம்பிக்கைக் கூட்டணி வரவேற்றாலும் இக்காலக் கட்டத்தில் மக்களுக்கான உதவித் திட்டங்களை வழங்க வேண்டும் என அது கூறியது.

ரி.ம. 2,500க்கும் குறைவான வருமானம் பெறுகிறவர்களுக்கு ரி.ம. 500உம், ரி.ம. 2,500 – ரி.ம. 5,000 வரையில் வருமானம் பெறுகிறவர்களுக்கு ரி.ம. 300 என்பதும் மிகச் சிறிய தொகையே. அதுவும் இம்மாத இறுதியில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

ஒரு முறை மட்டுமே வழங்கப்பட இருக்கும் உதவித் தொகை விரைவுப் படுத்தப்பட வேண்டும். மேலும், அது முறையே ரி.ம. 2,000 ஆகவும் ரி.ம. 1,500ஆகவும் உயர்த்தப்பட வேண்டும்.

மேலும், மாமன்னரிடம் ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் பரிந்துரைத்தது போல் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் இருந்து மூன்று மாதம் ஒத்திவைக்கப்படுவது எம்40 தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இது வரையில் அந்த வாய்ப்பு பி40 தரப்பினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எம்40 தரப்பினரும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என அச்செயற்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஊதிய உதவித் திட்டமும் சிறு – நடுத்டர வணிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனால், இத்துறையில் உள்ள பணியாளர்களின் வேலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

அதனைத் தொடர்ந்து, 30% மின்சாரக் கட்டணக் கழிவையும் அச்செயற்குழு பரிந்துரைத்துள்ளது. பொது மக்கள் வீட்டில் அதிகமாக இருக்க வேண்டியச் சூழலால் மின்சாரப் பயன்பாடும் வழக்கு நிலையைவிட அதிகமாக இருப்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் வணிகங்கள் குறித்து அனைத்துலக வாணிபம், தொழல்துறை அமைச்சு கூடுதல் கவனத்துடனுடம் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மிக அதிகப்படியான (17) துறைகள் செயல்பட அவ்வமைச்சு அனுமதித்த சம்பவத்தைச் சுட்டிக் காட்டிய நம்பிக்கைக் கூட்டணி, கோவிட்-19க்கு எதிரானப் போராட்டத்தில் அது ஒரு பின்னடைவு எனக் குறிப்பிட்டது.

தற்பொழுது விதிக்கபப்ட்ட முன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளையோடு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அது மேலும் இரு வாரங்களுக்கு இம்மாதம் 28 ஆம் நாள் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அன்றாட கோவிட்-19 நேர்வுகள் 5,000க்கும் மேல் பதிவாகியுள்ளதால் இந்தக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது என தற்காப்புக்கான மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.