கைகோர்த்து மீண்டெழுவோம்: உதவிகரம் நீட்டுங்கள்! டத்தோ திருமூர்த்தி

செலாயாங், ஜூலை 17-

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மரண எண்ணிக்கை அதிகரித்ததன் காரணத்தால் செலாயாங் மருத்துவமனைக்குக் கொள்கலன் பிணவறை தேவைப்படுவதாக அதன் தடயவியல் பிரிவு விடுத்த கோரிக்கைக்குச் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை விரைவில் பதிலளிக்கும் என அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூகச் சேவையாளரான டத்தோ டாக்டர் மூர்த்தி நடேசன், 40 அடி நீளம் கொண்ட கொள்கலனை பிணவறைக்கு இலவசமாக வழங்கினார். அதன் மதிப்பு ரிம 34,000 ஆகும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பல்வேறான சவால்களை எதிர்கொண்டு வருகின்றார். மலேசியாவில் நாளுக்கு நாள் கோவிட் 19 தாக்கம் உயர்ந்து கொண்டே வருவதால் முன்கள பணியாளர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளிலும் இடங்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. அதோடு நாள் ஒன்றுக்கு அதிகமான மரணச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுகின்றன. இப்படிப்பட்ட பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளது.

சுகாதார தலைமைச் செயலாளர் டத்தோ ஷாபி அப்துல்லா

இந்நிலையில் செலாயாங் மருத்துவமனைக்குப் பிணங்களை வைப்பதற்கான கொள்கலம் தேவை என்ற செய்தி அறிந்ததும், தாம் தமது நண்பர்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததாக டத்தோ டாக்டர் மூர்த்திக் கூறினார்.

”இந்தக் காலகட்டத்தில் மருத்துவம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உதவிகள் தொடரப்பட வேண்டுமென்பதே எனது வேண்டுகோள். உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வாருங்கள்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

செலாயாங் மருத்துவமனைக்குக் கொள்கலம் தேவை என்ற செய்தியை அறிந்தவுடன் தாம் உடனடியாகச் சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஷாபியை தொடர்பு கொண்டு அதனை வழங்குவதற்கு உறுதியளித்தாகவும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

எனது உதவியை ஏற்றுக் கொண்ட டத்தோ ஷாபி, செலாயாங் மருத்துவமனையில் துணை தலைவரை அணுகுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதால், இந்த நடவடிக்கை துரிதமாக நடந்தேறியது என மூர்த்திக் கூறினார்.

முன்னதாக, கோவிட்-19 தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அம்மருத்துவமனையில் அதிகரித்து வருகின்ற நிலையில், பிணவறையில் இடப்பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது என உத்துசான் குறிப்பிட்டிருந்தது.

கிள்ளான் தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனைக்குக் கிடைத்தது போல் எங்களுக்கும் அதே போன்ற உதவி தேவைப்படுகிறது. மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் நெரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் அம்மருத்துவமனை தரப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று மதியம் 2 மணியளவில் செலாயாங் மருத்துவமனையில் நிர்வாகத்திடம் அந்தக் கொள்கலதை டத்தோ மூர்த்தி ஒப்படைத்தார். அவருடன் சமூகச் சேவையாளர் டத்தோஶ்ரீ ஜெயந்திரனும் உடனிருந்தார்.