கோலாலம்பூர் | 17/7/2021 :- நாட்டில் பரவலாக பேசப்படும் ஒப்பந்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட சிக்கலை அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி இளைஞர் பிரிவு சார்பில் அத்ன தலைவர் டாக்டர் தமிழ்மாறன் கேட்டுக் கொண்டுள்ளார். துடிப்புமிக்க இளம் மருத்துவர்களை முடக்கி வைப்பதற்கும் அவர்களை நிச்சயமற்ற நிலையில் தள்ளுவதற்கும் மாறாக, அவர்கள் எதிர்நோக்கும் அவலத்தை அரசு செவிமடுக்க முன்வர வேண்டும். அரசு மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள், எதிர்கால சுகாதாரத் துறைக்கான முன்னுரிமை மற்றும் தயார் நிலை ஆகிய அம்சங்களில் இடைவெளியும் குறைபாடும் உள்ளன என்பதை அரசு ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ ஆனால் அதுதான் உண்மை. நாட்டில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் முதிய பருவத்தில் ஏற்படும் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்ட கால நோய்ப் பரவலும் அதிகரிப்பதால் அதற்கான மருத்துவக் கட்டமைப்பும் மருத்துவர் தேவையும் அவசியமாகிறது. அதைப்போல உட்புறப் பகுதிகள் மற்றும் தோட்டப்புறங்களில் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஓரிடத்தில் மிக அதிகமாக மருத்துவர்களை நியமிப்பது, ஆரம்ப சுகாதார சேவை மிகுதியாகத் தேவைப்படும் புறநகர்ப் பகுதி, வறிய மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு குறைவான மருத்துவர்களை அனுப்பும் முடிவுகளைப் பார்க்கும்பொழுது அரசாங்க நடைமுறையில் ஒரு சீரான நடைமுறை பின்பன்றப்படுவதில்லை என்பது தெரிய வருகிறது. எனவே, எதிர்காலத்திற்கான சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றால், ஆரம்ப சுகாதாரம்-சமூக பாதுகாப்பு-மருத்துவமனைகள் ஆகியவற்றை உள்ளடக்ககி 10 ஆண்டுகளுக்கான பெருந்திட்டத்தை பன்முக பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் அரசு திட்டமிட வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி பரிந்துரைக்கிறது. எம்ஏபி முன்வைத்துள்ள இந்த ஆலோசனை, திர்மானங்களை நடைமுறைப் படுத்தினால், ஒப்பந்த மருத்துவர்களை நாம் கிழ்க்காணும் தளங்களின்வழி பயன்படுத்திக் கொள்ளலாம்:
  1. ஒப்பந்த மருத்துவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்கள் பெற்ற மருத்துவ கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் தங்களின் ‘ஹௌஸ்மென்ஷிப்’ பயிற்சியை சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் பெறுவதற்காக அரசாங்க, தனியார் மருத்துவமனகள் அடங்கிய பெருந்திட்டத்தை வகுக்க வேண்டும்.
  2. மருத்துவப் பயிற்சி அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கி அவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம்.
  3. நாட்டில் 154 அரச மருத்துவமனைகள் இருக்கும் அதேவேளை 250 தனியார் மருத்துவமனைகள் உள்ளன; அதேவேளை, அரசாங்கத்தின் சார்பில் 5 மருத்துவப் பயிற்சி மனைகளும் ஒரேயொரு தனியார் மருத்துவப் பயிற்சி மனையும் உள்ளன. மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் அரசாங்கத்துடன் தனியார் மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றும் அதேவேளை, சிறப்பு மருத்துவர்களை உருவாக்குவதிலும் தனிகவனம் செலுத்தினால், அது மருத்துவத் துறையின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். எனவே, ஒப்பந்த மருத்துவர்களின் அவல நிலையை கவனிக்காமலும் சுகாதாரத் துறைக்கு ஏற்படும் நீண்டகால பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமலும் அதிகப்படியான மருத்துவர் நியமனத்தையேக் கூறிக் கொண்டிருந்தால், அது அரசாங்கத்தின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது என்று டாக்டர் தமிழ்மாறன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.