பினாங்கு, ஜூலை 16-

பினாங்கு மாநிலத்தின் குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவையின் 19ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இங்கிருக்கும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் பக்திப் பரவசம் கமழும் விதத்தில் விமரிசையாக அனுசரிக்கப்பட்டது.

குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவைத் தலைவர் மோகன் நடராஜா தனது செயற்குழுவினருடன் இணைந்து வெகுச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சமய நெறிமுறைகளில் நன்கு வேரூன்றிய ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட சிறார்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

சமய ஆர்வலரும் சமூக சிந்தனையாளருமான டாக்டர் ராஜூ திறப்புரை செய்த இவ்விழாவில் பேரவைத் தலைவர் என்.மோகனின் தலைமையுரையும் ஏற்பாட்டுக் குழுத் தலைவி தொண்டர்மணி மாதவி நாயர் வரவேற்புரையும் அடுத்தடுத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியவர் இராஜாஜி தம்பதியர் சிறப்பு வருகையளித்து, குத்து விளக்கேற்றி திருமுறை ஓதுதலை இனிதே துவக்கி வைத்தனர்.

முன்னதாக, சிறார்களின் அணிவகுப்புடன் நால்வர் ஊர்வலம் நடைபெற்றதுடன் கடந்த 2016ஆம் ஆண்டின் தேசிய திருமுறை போட்டியில், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சியில் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டதுடன், யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் வாகை சூடிய மாணவர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் எம்.முனியாண்டியின் சிறப்புரையும் திருமுறை விழாவின் விதிமுறைகள் குறித்த ஜி.கவிதாவின் விளக்கவுரையும் இடம் பெற்ற வேளையில்,புக்கிட் குளுகோர் தொகுதி மஇகா தலைவர் கே.லோகநாதனின் பேருரையும் உடன் அரங்கேறியது.

மாநில ரீதியாக இந்து சங்க வட்டாரப் பேரவைகளின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற திருமுறை ஓதும் விழாக்களில் அதிகமான இந்துக் குழந்தைகள் பங்கேற்க வேண்டுமென்றும் இது சாத்தியமாவதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சமய அறிவை விதைப்பதற்கு ஆர்வம் காட்டுவது அவசியமென்று இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவி மாதவி நாயர் கேட்டுக் கொண்டார்.

சிறுவர்களுக்கு இளம் வயதிலேயே சமய சிந்தனையை ஊட்டும் வழி வகைகளில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகைப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்த அவர், இதற்கு அவர்கள் தங்கள் குழந்தைகளை அவரவர் வசிப்பிடங்களில் செயல்படும் இந்து சங்கப் பேரவைகளில் இணைப்பதற்கு முன் வருவதே சிறந்த உபாயம் என்றும் கோரிக்கை விடுத்தார்.