திருச்சி | 28/7/2021 :-

2023ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள 11வது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் நடத்த வேண்டும் என திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டு குழு, சோழ மண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் தமிழ், சீனம், கிரேக்கம் உள்ளிட்ட 6 மொழிகள் மட்டுமே செம்மொழி என்கிற சிறப்பு நிலையோடு நிலைத்துள்ளன. குறிப்பாக எ(இ)ப்போதும் இளமை குன்றா தமிழ் மொழியின் உயர்வுகளை, பெருமைகளை உலகளாவிய அளவில் கொண்டு சேர்க்கவும் மொழியின் மேம்பட்ட வளர்ச்சிக்கும் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கூடி 1964ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினர்.

இதையடுத்து 2 ஆண்டு கால இடைவெளியில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, 1966ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து 5வது உலகத் தமிழ் மாநாடு 1981ம் மதுரையிலும் 8வது உலகத் தமிழ் மாநாடு 1995ம் ஆண்டு தஞ்சாவூரிலும் நடைபெற்றது. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 2019ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரிலும் நடைபெற்றுள்ளது.

இடையில் கடந்த 2010ம் ஆண்டு கோயம்புத்தூரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 2023ம் ஆண்டு 11வது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்று கூறப்படும் நிலையில், அதை திருச்சியில் நடத்த வேண்டும் என்று சோழ மண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

முற்கால சோழர்களின் தலைநகரான உறையூர், மருது சகோதரர்களின் ஜம்பு தீவு பிரகடனம், கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராக நடைபெற்ற முதல் மாநாடு, கிழப்பழுவூர் சின்னச்சாமியின் முதல் உயிர்த் தியாகம், மாணவர்களின் மொழி காக்கும் போராட்டங்கள், பெரியார் நீண்ட காலம் தங்கிய புத்தூர், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் என திருச்சியின் பெருமிதங்களையும் தமிழோடுள்ள தொடர்புகளும் நிறைய திராவிட இயக்கங்கள், அரசியல் கட்சிகளுக்கு திருப்பு முனை மாநாடுகளும் திருச்சியில் நடைபெற்று வருகின்றன.

சுமார் 5 – 6 மணி நேரத்தில் தமிழ் நாட்டின் எந்த ஊருக்கும் சென்று விடும் சாலைகள், பிற மாநிலங்களுக்குத் தொடர்வண்டி, வெளி நாடுகளுக்கு வான் போக்குவரத்து உள்ளிட்ட உலகத் தமிழ் மாநாடு நடத்த சரியான இடம் திருச்சி தான் என்று காரணங்களை அடுக்குகிறார், திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டு குழுவின் சியாம் சுந்தர்.

தமிழ்நாட்டின் மையப்பகுதியாக மட்டுமின்றி மாநில, ஒன்றிய அரசுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் நிறைந்த திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினால், திருச்சியின் உள் கட்டமைப்பு இன்னும் மேம்படும். மக்கள், அறிஞர் பெருமக்கள் பங்கேற்கவும் எளிதாக இருக்கும். எனவே 2023ம் ஆண்டு நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டு குழு, சோழ மண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

– நன்றி : நியூஸ்18 தமிழ்