கோலாலம்பூர் | 30/7/2021 :-

அண்மையில் மலேசியாவுக்குத் தொழிலாளராக வந்த தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் துன்புறுத்தப்பட்டதாக அந்நாட்டுத் தொலைக்காட்சி – யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மலேசியா மீது அவர் பொய்யானக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் எனவும் அவ்விவகாரம் குறித்து மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கம் பிரிஸ்மா வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

மலேசியாவில் பல கொடுமைகளுக்குத் தாம் ஆளானதாகவும், ஊதியம் வழங்கப்பாடாதது, பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல், கடப்பிதழ் எரிப்பு எனப் பலக் குற்றச் சாட்டுகளை நேர்கொண்ட பார்வை எனும் தொலைக்காட்சி – யூடியூப் நிகழ்ச்சியிம் வேலாயுதம் முன்வைத்தார்.

குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை சரியாக ஆராயாமல் எந்தவொரு பின்புல விசாரணையும் இன்றி அந்த நிகழ்சியை ஒளிபரப்பிய Behindwoods Air யூடியூப் சேனலுக்கும் தொகுப்பாளர் இலக்ஷ்மி இராமக்கிருஷ்ணனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் வழக்கஞர் நோட்டீசை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.

வேலாயுதத்தின் குற்றச் சாட்டுகளில் உண்மையில்லை என்பதை வேலாயுதம் மலேசியா வர ஏற்பாடுகளைச் செய்த இடைத்தரகர் சையது ஏ சம்சுதீன், மதுரை உயர் நீதிமன்றத்தில் இடைத் தரகருக்கு உதவிய வழக்கறிஞர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, வேலாயுதம் மலேசியாவில் வேலை செய்த மசாலா வீல்ஸ் நிர்வாக இயக்குநர் இரவீந்திரன் ஆகியோர் வழங்கிய ஆதரங்களையும் வாக்கு மூலங்களையும் ஆராய்ந்த பிறகு, வேலாயுதம் மலேசியா மீது வைத்தக் குற்றச் சாட்டுகள் உண்மையில்லை எனத் தெரிய வந்துள்ளதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சுரேஷ் கூறினார்.

இரு நாடுகளை நேரடியாக உட்படுத்திய விவகாரத்தில் Behindwoods ஊடகம் தமது கடமையைச் சரியாகச் செய்யத் தவறியுள்ளது.

வேலாயுதத்தின் அவ்வாறானப்ப் போலிக் குற்றச்சாட்டுகளாலும் அதனை ஒளிபரப்பிய ஊடகத்தாரின் பொறுப்பற்றத் தனத்தினால் மலேசியாவில் பணிபுரியும் மற்ற தமிழக / இந்தியத் தொழிலாளர்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தாரை அது வெகுவாகப் பாதித்துள்ளது.

ஒளிபரப்பாகிய அந்நிகழ்ச்சி குறித்து 7 நாட்கள் கால அவகாசத்தில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதைத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் அந்த வழக்கறிஞர் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.