மெட்ரிட், செப்.14 –
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 3 – 0 என்ற கோல்களில் சைப்ரசின் அஃபோல் நிகோசியா அணியை வீழ்த்தியது.

ஸ்பெயின் லீக் போட்டியில் 4 ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ , சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மெட்ரிட் அணியில் களமிறங்கி இருந்தார். ஸ்பெயின் லீக் போட்டியில் ரொனால்டோ இல்லாமல் கடந்த இரண்டு ஆட்டங்களில் தடுமாறிய ரியல் மெட்ரிட், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் போட்டியை அதிரடியுடன் தொடங்கியுள்ளது. ரியல் மெட்ரிட்டின் இந்த வெற்றிக்கு ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஆட்டம் தொடங்கிய 12 நிமிடங்களில் கேரத் பேல் அனுப்பிய பந்தை ரொனால்டோ கோலாக்கினார். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் வழி ரொனால்டோ ரியல் மெட்ரிட்டின் இரண்டாவது கோலைப் போட்டார். 61 ஆவது நிமிடத்தில் கேப்டன் செர்ஜியோ ராமோஸ் அடித்த கோல், ரியல் மெட்ரிட்டின் வெற்றியை உறுதிச் செய்தது. எச் பிரிவில் ரியல் மெட்ரிட் முதலிடத்தில் உள்ள வேளையில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
