சில்வர்ஸ்டோன், ஜூலை.17 –
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார்பந்தயத்தளத்தில் நடைபெற்ற பார்மூலா ஓன் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் குழுவின் லுவிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஹமிடல்ன் , பிரிட்டிஷ் கிராண்ட பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
மெர்சிடிஸ் குழுவின் சக ஓட்டுநரான வல்டேரி போட்டாசை இரண்டாவது இடத்துக்கு தள்ளி ஹமில்டன் முதல் இடத்தைப் பிடித்தார். பெராரி குழுவின் கிமி ரெய்கோனேன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஓட்டுநருக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் செபஸ்டியன் வெட்டல் ஏழாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
போட்டியை முதல் இடத்தில் இருந்து தொடங்கிய ஹமில்டன் தொடக்க முதலே ஆதிக்க செலுத்தினார். ஹமில்டனைத் துரத்தி பிடிக்க செபஸ்டியன் வெட்டல் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அவருடைய காரின் டயரில் ஏற்பட்ட கோளாறு, வெட்டலுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் வழி ஓட்டுநருக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வெட்டலுடனான புள்ளி வேறுபாட்டை ஹமில்டன் ஒரு புள்ளியாக குறைத்துள்ளார். இந்த வெற்றியானது பார்மூலா ஓன் கார்பந்தயப் போட்டியில் ஹமில்டன் பதிவு செய்துள்ள 57 ஆவது வெற்றியாகும். பார்மூலா ஓன் கார்பந்தயப் போட்டியின் அடுத்த சுற்று ஹங்கேரியில் நடைபெறவுள்ளது.
