புதிய அமைச்சரவை பட்டியலை மலேசியாவின் 9ஆவது பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி அறிவித்திருக்கின்றார். அமைச்சர்களின் நியமனங்கள் குறித்துப் பலர் சமூகத் தளங்களில் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 70 பேர் அடங்கிய அமைச்சரவை பட்டியலில் கடந்த முறை போலவே துணைப் பிரதமர் அறிவிக்கப்படவில்லை. மாறாக 4 மூத்த அமைச்சர்களை அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்காப்பு அமைச்சராக டத்தோஶ்ரீ ஹிசாமூடின் துன் உசேன், அனைத்துலக வாணிப, தொழிலியல் அமைச்சராக டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, நிதி அமைச்சராகச் செனட்டர் தெங்கு ஸாஃருல் தெங்கு அப்துல் அஸிஸ், கல்வி அமைச்சராக டாக்டர் ராட்சி ஜிடின் ஆகிய நால்வரும் மூத்த அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளார்கள்.
முன்னதாக அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே போல் டத்தோஶ்ரீ சரவணன் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது குறித்துப் பலர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றார்கள்.
இந்நிலையில் கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலர் இந்த அமைச்சரவையிலும் பொறுப்பு வகிக்கின்றார்கள். அதோடு சில அமைச்சர்கள் தங்களின் அமைச்சுகளை மட்டுமே மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
முன்னாள் சுகாதார அமைச்சர் அடாம் பாபா, கைரி ஜமாலுடின் வகித்த தொழில்நுட்ப புத்தாக்கத் அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றவிருக்கின்றார்.
முன்னாள் பிரதமர் தான்ஶ்ரீ முகிடின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்ததாகக் கூறி அவரது அமைச்சரவையிலிருந்து வெளியேறியவர்களில் ஒருவருக்கு அதே பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்க்கல்வி அமைச்சராக அம்னோவின் ரொயாய்னி அமாட் பொறுப்பேற்கின்றார்.
எரிசக்தி இயற்கை வளம் அமைச்சர் பதவியைத் துறந்த டத்தோஶ்ரீ சம்சூல் அன்வாருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. அந்தப் பதவியில் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளரும் பிரதமர் துறையில் சட்டபிரிவு முன்னாள் அமைச்சருமான தக்கியுடின் ஹஸான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டரசு பிரதேச அமைச்சராக இருந்த அனுவார் மூசா, தொடர்பு பல்லூடக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இந்நிலையில் கூட்டரசு பிரதேச துணையமைச்சராக இருந்த எட்மன் சந்தாரா, சுற்றுலா கலை, பண்பாட்டு துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரும் பேரா மாநில முன்னாள் மந்திரி பெசாருமான அமாட் பைசால் அசுமு, இளைஞர் விளையாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்கின்றார். கடந்த அரசாங்கத்தில் இதன் அமைச்சராக இருந்த கப்பாள பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

