நக்கீரன்

கோலாலம்பூர் | 30/9/2021 :- சிலாங்கூர், சிப்பாங் மாவட்டம் சுங்கை பீளேக்கில் வசிக்கும் தயாளன், உள்ளூரில் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிய வேளையில் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றியுள்ள நலிந்த மக்களுக்கு அன்னதானம் செய்து தன் பெயருக்கேற்ப தயாள குணத்தை வெளிப்படுத்தி உள்ளார். சுங்கை பீளேக் அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயத்தின் முன்னாள் துணைத் தலைவரான ச.தயாளன், அண்மையில் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடிய அதேநேரத்தில் தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள், துப்புரவு தொழிலாளியர், ஆதரவற்று சாலை ஓரங்களில் வசிக்கும் முதியவர்கள் என நளிந்த மக்களைத் தேடிச் சென்று 200 உணவுப் பொட்டலங்களை வழங்கி சம்பந்தப்பட்டவர்களின் மனங்குளிர வைத்துள்ளார். இதற்காக அங்குள்ள நண்பர்களின் துணையை நாடி, அவர்களின் மூலம் இந்த சமூக நல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் தயாளன். வட்டார அளவில் சமூக செயற்பாட்டாளராகவும் சிறு தொழில் முனைவராகவும் விளங்கும் தயாளன், தன்னுடைய மனைவி கு.ஜெயமாதவியின் ஆலோசனையின்படி இந்த சேவையை மேற்கொண்டுள்ளார். தஞ்சை நகரப் பகுதியில் வசிக்கும் தயாளனின் நண்பர்களின் மூலம், முதல் நாளே சாப்பாட்டுப் பொட்டலத்திற்கான ஏற்பாட்டை செய்து, சம்பந்தப்பட்ட தினத்தில் ஒரு தானி வாகனத்தின்(ஆட்டோ ரிக்ஷா) மூலம், உணவுப் பொட்டலங்களை ஏழை மக்களுக்கு வழங்கி, அதன் மூலம் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தயாளன்-ஜெயமாதவி இணையர்.