கோலாலம்பூர் | 4/10/2021 :-

தேசியப் பூப்பந்து வீராங்கனை கிசோனா மீது வீசப்பட்ட இனவாதக் கருத்து குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

அவ்விவகாரத்தை டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைவர் துணை ஆணையர் நோர் டெல்ஹான் யாஹயா தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து ஓரு காவல் துறை புகார் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

அந்தப் புகார்  நேற்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அது குற்றவியல் பிரிவு 504இன்படியும், தொடர்பு பல்லூடக சட்டம் 1998 பிரிவு 233 இன் படியும் விசாரிக்காப்படுவதாகத் தெரிவித்தார்.

ஃபின்லாந்தில் சுடிர்மான் கிண்ண உலகப் பூப்பந்து போட்டியில் கிசோனா மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டுள்ளார்.

நேற்று அரை இறுதி சுற்று நடந்தது. அதில் 3 – 1 எனும் மொத்தப் புள்ளி எண்ணிக்கையில் மலேசியா ஜப்பானிடம் தோல்வி கண்டது.

அப்போது கிசோனா மீது இனவாதக் கருத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது.

அவ்விவகாரம் இணையவாசிகள், இளைஞர் விளையாட்டு அமைச்சர் அகமாட் ஃபைஸால் அஸுமு ஆகியோர் உட்பட பலதரப்பட்டோரின் சினத்தைத் தூண்டியது.

அந்த இனவாதக் கருத்தைப் பதிவிட்ட போர்ஹானுடின் சே இரகிம் தமது தவறை உணர்ந்து மலேசிய மக்களிடம் பொது மன்னிப்பு கேட்டார். மேலும், தாம் வகித்து வந்த பாசீர் பூத்தே தொகுதியின் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் துறந்தார்.