அலோர்ஸ்டார், செப். 18-
வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு அனுமதியை வழங்குவதற்குமுன் ஊழியர் சேமநிதி வாரியம் (இ.பி.எப்) அதன் நிரந்தர நடவடிக்கை நடைமுறையை (எஸ்.ஓ.பி) பின்பற்ற வேண்டுமென நிதித்துறை துணையமைச்சர் டத்தோ ஒத்மான் அஜிஸ் வலியுறுத்தினார்.

அது செய்கின்ற ஒவ்வொரு முதலீடும் வர்த்தகத் திட்டத்திற்கு ஏற்புடையதாக என்பதை கண்டறிவதோடு சந்தாதாரர்களுக்கு இலாப ஈவு வகையில் அந்த முதலீட்டு திட்டம் நன்மையளிப்பதை உறுதி செய்வதில் இபிஎப் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

நீண்ட காலமாகவே இபிஎப்பும் கஸானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் வெளிநாடுகளில் முதலீடு செய்து வருகின்றது. இதில் முதலீட்டுத் துறை சம அளவாக இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை நிறுவனச் செயல்நெறிகளில் ஒரு பகுதியாகும் என்று சுங்கை கெடா வெள்ள அணைக்கட்டுத் திட்டத்தைப் பார்வையிட்ட பிறகு அமெரிக்காவில் இவ்விரு நிறுவனங்களும் முதலிடு செய்வது தொடர்பில் எதிர்கட்சிகள் குறை கூறுவது பற்றி செய்தியாளர்களிடம் வினவிய போது ஒத்மான் அஜிஸ் இவ்வாரு பதிலளித்தார்.

இதுவரை அமெரிக்காவில் இபிஎப் 700 கோடி அமெரிக்க டாலரை சமபங்கு ரீதியில் முதலீடு செய்திருக்கும் வேளையில் கலிபோர்னியா, சிலிகோன் வேலியில் அலுவலகத்தைக் கொண்டிருக்கும் கஸானா நேஷனல் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 40 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது. பங்குகளை வாங்குவதில் மட்டுமின்றி உள்ளூர், ஆசியான், அனைத்துலக முதலீடுகளை உள்ளடக்கிய பெரிய திட்டங்களிலும் விவேகமான முறையில் வாய்ப்புகளைத் தேடிக் கொள்வது அவசியமாகும்.

அமெரிக்காவுக்கு உதவ நாம் யார்? அந்நாட்டின் பொருளாதாரம் இப்போது டிரில்லியன் டாலரை அடைந்து விட்ட வேளையில், வெ.10,000 கோடியில் நாம் உதவிடப் போவதில்லை. நியாயமான வருமானத்தைத் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வதே மிக முக்கியம் என ஒத்மான் அஜிஸ் கூறினார்.