சென்னை | 9/10/2021 :-

கவிஞர் பிறைசூடன், 65, மாரடைப்பால் நேற்று காலமானார்.

சென்னை நெசப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசிந்து வந்த கவிஞர் பிறைசூடன், சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் 1,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆன்மிகவாதியும், இலக்கியவாதியுமான பிறைசூடன், திரைப்பட எழுத்தாளர் சங்க செயலாளராகவும் இருந்துள்ளார்.

சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். பல பக்தி பாடல்களை எழுதியுள்ளார். ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் ஜொலித்தார். திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த இவர், 1985ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த, ‘சிறை’ படம் வாயிலாக, பாடலாசிரியராக அறிமுகமானார்.

சமீபத்தில், ‘ஆஸ்கார்’ விருதுக்கு, இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் இருந்தார்.தமிழக அரசின், ‘கபிலர் விருது’ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். பிறைசூடன் மறைவுக்கு, திரைத் துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது உடல் தகனம், இன்று மாலை சென்னையில் நடக்கிறது.

நன்றி : தினமலர்