கோலாலம்பூர் | 13/10/2021 :

மலேசிய இந்திய சமுதாயத்தில் பி-40 குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் மேம்பாட்டிற்காக மித்ரா மூலம் ஏராளமான திட்டங்களை மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி வகுத்தார். அப்படிப்பட்ட சமூக நல-இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம் ஒன்றைக்கூட மித்ராவின் இப்போதைய நிருவாகத்தால் காட்ட முடியாது என்று எம்ஏபி தகவல் பிரிவு தலைவர் மாதவன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி மித்ரா-விற்கு பொறுப்பேற்றதும் முதல் வேலையாக அனைத்து அரசியல் நியமனங்களையும் நீக்கினார். சம்பந்தப்-பட்டவர்களுக்கு பதிலாக புதிய அரசியல் நியமனங்களுக்காக பல தரப்பில் இருந்தும் கடுமையான அழுத்தம் எழுந்தபோதும் அவர் மறுத்துவிட்டு, பரந்த அனுபவம் வாய்ந்த அரசு பணியார்களையும் நிபுணர்களையும் நியமனம் செய்தார்.

தவிர, மித்ராவின் நிதி ஒதுக்கீட்டிலும் அவர் புதிய கொள்கையை வகுத்தார். அதற்கு முன் 100 மில்லியன் வெள்ளி மானியத்தில் பெரும்பகுதி  ஓரிருநாள் தன்முனைப்புப் பயிற்சி, ஒரு நாள் ஒப்பனைப் பயிற்சி, 1 நாள் தையல் பயிற்சி என்ற வகையில் ஒதுக்கப்பட்டது. இதனால் பலன் அதிகம் இல்லாததால் இது போன்ற பயிற்சிகளுக்கு நிதி ஒதுக்குவதை பொன் வேதமூர்த்தி நிறுத்தினார்.

அவரின் கண்காணிப்பில் குறைந்தது 3 மாதம், அதிகபட்சம் ஒர் ஆண்டு கால பயிற்சிக்கு உட்பட்ட, அதிக பயன் விளைவிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட திட்டங்களில் கீழேக் குறிப்பிடபட்டவை ஒரு சில:

1.         கடலடி வெல்டிங்

2.         எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழில்நுட்பம்

3.         ஹுவாவெய் 5ஜி தொழில்நுட்பம்

4.         ட்ரோன் இயக்கம்

5.         சூப்பர்பைக் பழுது பார்த்தல்

பலவீனமாக உள்ள நம் இளைய சமுதாயத்தின்  மேம்பாட்டிற்கான பயிற்சிகளுக்கு செனட்டர் பொன்.வேதமூர்த்தி வெ.52 மில்லியனை ஒதுக்கினார். இத்தகைய பயிற்சித் திட்டங்கள் யாவும் அரசியல் ஈடுபாடில்லாத தொழில் வல்லுநர்களால் நடத்தப்பட்டன.

இப்போதைய மித்ரா சார்பில் அப்படிப்பட்ட நடவடிக்கைகளா மேற்கொள்ளப்-படுகின்றன? அப்படி இருந்தால் ஏதாவது ஒன்றைக் குறிப்பிடமுடியுமா என்று மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வினாத் தொடுத்துள்ளார்.