முகப்பு > மற்றவை > கெப்போங், ஜிஞ்சாங் உத்தாரா குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு சாவிகள் ஒப்படைப்பு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கெப்போங், ஜிஞ்சாங் உத்தாரா குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு சாவிகள் ஒப்படைப்பு!

கெப்போங், செப். 18-
ஜிஞ்சாங் உத்தாரா குடியிருப்புவாசிகளான சுமார் 1000 குடும்பங்களுக்கு சந்தை விலையை காட்டிலும் மிக மலிவான விலையில் வீடுகள் வழங்கப்பட்டது. ஜிஞ்சாங் உத்தாராவிலுள்ள தாமான் ஸ்ரீ அமானில் கட்டப்பட்டுள்ள பி.பி.ஆர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் சந்தை விலை குறைந்தது 1 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளியாகும். ஆனால், மேம்பாட்டு நிறுவனமும் மத்திய அரசாங்கமும் சுமார் 35 ஆயிரம் வெள்ளி மதிப்பில் இந்த வீடுகளை அக்குடியிருப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.

6 மாதங்களுக்கு முன்பே சுமார் 634 குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கான சாவிகளை பெற்றுக்கொண்டனர். இதில் சுமார் 200க்கும் அதிகமான இந்திய குடும்பங்கள் அடங்கும். ஆனால், இதர குடியிருப்பாளர்கள் மேம்பாட்டு நிறுவனம் மிக அதிகமான விலையில் இந்த வீடுகளை வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக 1 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான வீடுகள் 35 ஆயிரம் வெள்ளியில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இன்று மாலை மணி 6.00 அளவில் அந்த மக்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தபட்ட குடியிருப்பாளர்களுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நஜீப் கூறுகையில், அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும் அதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் தேசிய முன்னணி தலைமையிலான மத்திய அரசாங்கம் சந்தை விலையை காட்டிலும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாட்டை காட்டுவதாக பிரதமர் நஜீப் குறிப்பிட்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன