கோலாலம்பூர் | 13/10/2021 :-

     நாட்டின் முன்னணி நடன ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஸ்ரீ கணேசன் நடன துறையில் ஆற்றிய சீரிய பங்களிப்பிற்காக கடந்த செப்டம்பர் மாதம் மூன்று அனைத்துலக விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

     ஆசிரியர் நாளையொட்டி செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா, மும்பை எஸ்சிஎல் ரிதம்ஸ் ஆராய்ச்சி மையம் இவருக்கு சிறந்த அனைத்துலக விருது வழங்கி கௌரவித்தது.

     அதே வேளையில், சிறந்த நடன படைப்பாளராகத் தேர்வு பெற்ற இவர் அனைத்துலக ரீதியில் நடன துறையில் சிறந்து விளங்கும் 26 நடனமணிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பையும் பெற்றார்.

     இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டியரஞ்சனி கலைக்கூட மையத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற “எல்லைகளுக்கு அப்பால்” எனும் அனைத்துலக கர்நாடக இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் குரு ஸ்ரீ கணேசன் “ அனைத்துலக சாதனையாளர் விருது” மற்றும் “நாட்டிய சர்வபூம அனைத்துலக விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

     இவர் உலகளாவிய நிலையில் சில அனைத்துலக நடன நிகழ்ச்சிகளில் தனது படைப்புகளை வழங்கி கலா ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இவரின் ராமாயண நாட்டிய நாடகம் 7 முறை உலகளவில் நடைபெற்ற அனைத்துலக நடன நிகழ்ச்சியில் அரங்கேற்றம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

     ஸ்ரீ கணேசாலய நடன பள்ளியின் தோற்றுனரான குரு ஸ்ரீ கணேசன் தனது மாணவர்களோடு சேர்ந்து இதுவரை 5,000திற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார். இவற்றில் 3,000 மக்களுக்கு நன்கொடை திரட்டும் நோக்கத்தில் நடத்தப்பட்டவையாகும்.

     தனது நாட்டிய திறமைக்காக இவருக்கு பல விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்கது ஆஸ்ரோவின் வாழ்நாள் சாதனையாளர் விருது என்று கூறப்படுகிறது.

     இந்தியாவின் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே மலேசிய இந்திய நடன படைப்பாளர்  என்ற பெருமையும் இவரைச் சாரும்.