சிஜங்காங் | 1/10/2021 :-

கூரை கட்டமைப்பு தமது உறுதித் தன்மையை இழந்ததால் இங்குள்ள தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளியின் இரு வகுப்பறைகள் நேற்று இடிந்து விழுந்தன.

நேற்று பிற்பகல் 2.00 மணி அளவில் நடந்த அச்சம்பவத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் சி கமலநாதன் தெரிவித்தார்.

கோலா லங்காட் மாவட்டத்திலேயே மிகப் பெரியத் தமிழ்ப்பள்ளீ எனும் பெருமையைப் பெற்றிருப்பதோடு 1950களில் இப்பள்ளி கட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பல முறை அந்தக் கூரை கட்டமைப்பை சீரமைத்திருந்தாலும், மிகப் பழமையானப் பள்ளி என்பதால் அந்த பல முறை இடிந்து விழுந்தது

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, இவ்விவகாரம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் மாநிலப் பொதுப் பணித் துறைக்கும் தெரிவித்திருப்பதோடு கன மழை பெய்தால் அடிக்கடி வெள்ளப் பிரச்சனை நேர்ந்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பாதிப்படைவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஒரு மணீ நேரம் தொடர்ந்தாற்போல் மழை பெய்தால், 0.3 மீட்டருக்கும் அதிகமான நீர் தேக்கம் ஏற்படுகிறது. ஆண்டுக்கு குறைந்தது 2 முறையாவது அவ்வாறு நிகழ்வதாக அவர் தெரிவித்தார்.

 சம்பந்தப்பட்டத் துறையிடம் பல முறை இப்பள்ளியின் பெ.ஆ.ச. செயலவையினர் தெரிவித்தும் பலனளிக்கும் முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனத் தமது வருத்தத்தையும் தெரிவித்தார்.

இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற உறுப்பினர், சிஜங்காங் பகுதி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடமும் இவ்விவகாரத்தைக் கொண்டு சென்று விட்டதாகவும் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்விவகாரத்தைக் குறிப்பிட்டு மாணவர்கள் பாதுகாப்பாகக் கல்வியை மேற்கொள்ள புதிய கட்டடத்தை மிக விரைவில் கட்டுவதற்குசெயல் திட்ட வரைவை தயாரித்து கல்வி அமைச்சிடம் வழங்க இருப்பதாகவும் அப்பள்ளியின் பெ.ஆ. சங்கத்தினர் தெரிவித்தனர்.