கோலாலம்பூர், அக்டோபர் 14-


மாடு வளர்ப்பு திட்டத்திற்காக மித்ராவிடமிருந்து தாம் ரிம 8 லட்சம் வெள்ளியை பெற்றதாகத் திசைகள் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பான செய்தி எனக் காஜாங் ரவி என அழைக்கப்படும் மஇகாவின் நீண்ட கால உறுப்பினருமான டத்தோ ரவிந்திரன் போலிஸ் புகாரை மேற்கொண்டுள்ளார்.

இதுவரையில் மித்ராவிற்குத் தாம் எந்த விண்ணத்தையும் சமர்பித்தது இல்லை என அவர் மஇகா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்ட திசைகள் ஊடகம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அதனை 14 நாட்களுக்குள் அவர்கள் செய்யத் தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்படுமென ரவிந்திரன் தெரிவித்தார்.

”இதனால் நாம் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனது பெயருக்கு மட்டுமல்ல கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற சூழ்ச்சி மட்டுமே இந்த விவகாரத்தில் தென்படுகின்றது.”

ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் ஊடக தர்மத்தின் அடிப்படையில் என்னை அழைத்துப் பேசியிருக்கலாம். அல்லது அது குறித்து யாரிடமாவது விளக்கம் கேட்டிருக்கலாம். எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காமல், பொய் புகாரை முன்வைப்பது எந்த வகையில் நியாயம். என அவர் கேள்வி எழுப்பினார்.

மக்கள் மத்தியில் தவறான சிந்தனையை விதைக்கக்கூடாது. மித்ரா நிதியை கண்காணிக்கப் பகுத்து வழங்க தனி அமைப்பு இருக்கின்றது. இது அவர்களுடைய வேலை. இத்தருணத்தில் மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியமென ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

தேசிய ஊடகத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தெடுப்பேன் என டத்தோ ரவிந்திரன் தெரிவித்தார்.