ரியோ டி ஜெனிரோ, செப்.19 –

பாரிஸ் செயின் ஜெர்மைன் கால்பந்து கிளப்பின் உச்ச நட்சத்திரங்களான பிரேசிலின் நெய்மாருக்கும் உருகுவேயின் எடின்சன் கவானிக்கும் இடையில் ” ஈகோ” போராட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் லியோனுக்கு எதிரான ஆட்டத்தில் யார் பினால்டி எடுப்பது என்பதில் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்களான நெய்மாருக்கும், எடின்சன் கவானிக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இறுதியில் கவானி அந்த பினால்டி எடுக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் அதனை கோலாக்குவதில் தோல்வி கண்டிருந்தார்.

இந்த பருவத்தில் கிடைத்த முதல் மூன்று பினால்டிகளையும் கோலாக்கிய எடின்சன் கவானி இந்த முறையும் தாமே அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தார். ஆனால் நெய்மார், பினால்டியை எடுக்க முன் வந்ததை அடுத்து இரண்டு ஆட்டக்காரர்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

பாரிஸ் செயின் ஜெர்மைன் அணி ஐரோப்பிய அளவில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு ஆட்டக்காரர்களுக்கு இடையிலான ஈகோ போராட்டத்துக்கு அந்த கிளப்பின் நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும் என பிரேசில் ஊடகங்கள் கூறுகின்றன. அதேவேளையில் நெய்மாரும் சுயநலத்துடன் தொடர்ந்து செயல்பட்டால் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என அந்த ஊடங்கள் தெரிவித்துள்ளன.