மஸ்ஜிட் தானா, நவ.15-

அடுத்த வார இறுதியில் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2018 பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மாநில மக்கள் வழங்கிய அதிகாரம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மீண்டும் வாக்களிக்கவிருக்கின்றனர்.


இத்தேர்தலில் லெண்டு தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஓர் இளைஞரான அஸ்ரி இப்ராகிம் களம் இறங்குகிறார். இவர் உள்ளூர் மக்களுடன் உணவகங்களில் அளவளாவி வருவதைக் காண முடிகிறது. லெண்டு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணப்பாளரான இவர் கடந்த 18 மாதங்களாக உள்ளூர் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வந்துள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இவர் தொடர்ச்சியாக ஆற்றிய சேவை கெஅடிலானுக்கு நல்ல பலன்களை வழங்கியுள்ளது.

நேரடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து வேட்பாளர் விவரங்கள் அடங்கிய கையேடுகளை விநியோகிப்பதில் கெஅடிலான் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நடைமுறை சிரமமாக இருப்பினும் அஸ்ரிக்கு இது நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவர் லெண்டு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் மந்திரி புசாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்திய மக்களூடன் பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார்

லெண்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு உதவ வாங்சா மாஜூ கெஅடிலானுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் லெண்டு சட்டமன்ற தேர்தல் இயந்திரத்திற்கு கெஅடிலான் உதவி வருகிறது.

வாங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ மற்றும் வாங்சா மாஜூ கெஅடிலான் கிளைத் தலைவர் ஹென்றி லாய் லெண்டு சட்டமன்ற தொகுதியில் இந்திய மற்றும் சீன வாக்காளர்கள் வாழும் பகுதிகளுக்கு வருகை புரிந்தனர்.

திறமையும் தீவிர அரசியல் போக்கையும் கொண்டிராத ஒரு சட்டமன்ற உறுப்பினரே தங்களுக்குத் தேவை என்று ஸ்ரீ லெண்டு குடியிருப்பாளர்களில் ஒருவரான ஜீவா தெரிவித்தார்.

“ஆற்றல்மிக்க தலைவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 22 மாத கால ஆட்சியில் பக்காத்தான் ஹராப்பான் சிறந்த நிர்வாகத்தையும் ஒற்றுமை உணர்வையும் கொண்டிருந்தது” என்றார்.

ஸ்ரீ லெண்டுவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், டாக்டர் டான் யீ கியூ, அஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாங்சா மாஜூ கெஅடிலான் பல்லின மக்கள் வாழும் பகுதிகளான பெக்கான் லெண்டு,பெக்கான் மஸ்ஜிட் தானா மற்றும் வீடமைப்பு பகுதிகளான தாமான் ஹார்மோனி தாமான் மக்மோர் மற்றும் ஸ்ரீலெண்டு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி வருகிறது.

N04 லெண்டு தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.இதில் வெற்றியை முடிவு செய்யும் ஆற்றல் இந்தியர்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், வாக்காளர்கள் குறிப்பாக வெளியில் உள்ளவர்களை வாக்களிக்கச் செல்லும்படி கோருவது வேட்பாளர்கள் அனைவருக்கும் சவால்மிக்க ஒன்றாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“இத்தேர்தலில் லெண்டு மக்கள் ஓர் இளைஞருக்கு வாய்ப்பு அளிக்கலாம். அஸ்ரியின் நிபுணத்துவ பாணி இந்தியர்களைக் கவர்ந்திருப்பது சில தினங்களாக இங்கு மேற்கொண்ட பிரசாரம் வழி தெரிய வந்துள்ளது. இவர் சிறந்த சட்டமன்ற உறுப்பினராகலாம் என்பதால் இவருக்கு ஆதரவு தரும்படி மலாக்கா வாழ் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் ஹென்றி லாய்.