நாடாளுமன்றம் | 26/11/2021 :-
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மலேசியத் தயாரிப்புகளை முன்னிறுத்தும் வரையறையைப் புத்ராஜெயா கொண்டு வர வேண்டும் என ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மலேசியக் குடும்பம் டி-சட்டை வங்காளதேசத்தில் தயாரிக்கப்பட்டது எனத் தெரிய வந்தபோது, நாடாளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இவ்விவகாரத்தை சா எழுப்பினார்.
நல்ல தரம் வாய்ந்த சட்டதான். அணியும் போதும் நன்றாகத்தான் உள்ளது. இருந்தாலும், அது மலேசியட்த் தயாரிப்பு இல்லை எனத் தெரிய வரும்போது வருத்தமளிக்கிறது எனக் கூறினார்.
இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சு அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மலேசியத் தயாரிப்புகளை முன்னிறுத்தும் வரையறையைக் கொண்டு வர வேண்டும். மேலும் அமைச்சின் நிதியின் வாங்கப்படும் எந்தப் பொருளும் மலேசியத் தயாரிப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பில் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹாலிமா முகம்மட் சாடிக் மன்னிப்பு கேட்க வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணியின் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஹோன் வாய் வலியுறுத்தினார்.
இருந்தாலும் இவ்விவகாரத்தை ஒரு பாடமாகக் கொண்டு இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என வோங் ஹோன் வாய்க்கு சா பதிலளித்தார்.

