கோலாலம்பூர், ஜூலை 17-
இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேட்மிண்டன் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகின்ற 19ஆம் தேதி காலை மணி 10.00 அளவில் கெப்போங்கிலுள்ள டெ சாலேஞ்சேர் ஸ்போர்ட்ஸ் மையத்தில் நடைபெறவிருப்பதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா தெரிவித்தார்.
இந்திய மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளை வழங்கிவரும் இக்கூட்டமைப்பு அவர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
இதில் மொத்தம் 20 கல்லூரிகளிலிருந்து சுமார் 54 குழுக்கள் கலந்துக்கொள்ளவுள்ளன. தற்போது வரையில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் 16 குழுக்களும் இரட்டையர் பிரிவில் 16 குழுவும் பங்கேற்கவுள்ளது. பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் 11 குழுக்கள் பங்கேற்கவுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான பிரிவில் 11 குழுக்கள் பங்கேற்கவுள்ளது.
பேட்மிண்டன் போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு கிண்ணங்களும் நற்சான்றிதழ்களும் பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்படும் என அவர் கூறினார். இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு தங்களது கல்லூரிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகளை தொடர்ந்து நடத்தவுள்ளது. அண்மையில் இதற்கான அறிமுக விழா டத்தோ எம்.சரவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பேட்மிண்டன் போட்டியைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் கபடி, செப்டம்பரில் ஓட்டப்பந்தயம், அக்டோபரில் புட்சால் முதலான போட்டிகள் நடைபெறவிருப்பதாக டத்தோ இப்ராஹிம் ஷா குறிப்பிட்டார். மேல்விவரங்களுக்கு 019-2225012 என்ற தொலைப்பேசி எண்ணில் ரவிசந்திரனைத் தொடர்பு கொள்ளலாம்.
