~ நக்கீரன் ~

கோலாலம்பூர் | 9/12/2021 :-

மலாயாவில் நேதாஜி தலைமையில் இந்திய இராணுவப் படை எழுச்சியுடன் செயல்பட்ட நேரம் அது; மலாயா இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மலாயா விடுதலையைவிட இந்தியாவின் விடுதலைக்காக முனைப்பு காட்டினர். காரணம், இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டால், அடுத்து மலாயாவும் விடுதலை அடையும் என்ற எதிர்பார்ப்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவப் படை(ஐஎன்ஏ)யில் இணைந்து துடிப்புடன் செயல்பட்டனர்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் தலைவராகவும் இருக்கும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அவர்கள் 1944-ஆம் ஆண்டில், 14-வயதில் ஐஎன்ஏ-வில் இணைந்து, 9 மாத பயிற்சியில் கலந்து கொண்டு முதல் நிலையில் தேர்ச்சி அடுத்த ஆண்டிலேயே பயிற்றுனராக உயர்ந்தார்.

வயதில் சிறியவராக இருந்ததால், அதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த டான்ஸ்ரீ, அதுமுதல் யார் கண்ணில் பட்டாலும் அல்லது எதிரில் தென்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் உடனே ‘சல்யூட்’ செய்யும் நிலைக்கு உயர்ந்தார்.

சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு, தென் கிழக்கு ஆசியாவில் உருவாக்கப்பட்ட ஐஎன்ஏ, இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற நேரத்தில் பிரிட்டிஷ் படையை எதிர்ப்பதற்காக ஜப்பானிய இராணுவத்துடன் சேர்ந்து செயல்பட்டது. இராணுவத்தில் புதிதாக சேர்பவர்களுக்கு பயிற்சி அளிப்பவராக செயல்பட்ட டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், கர்னல் தகுதி பெற்றிருந்தார்.

ஐஎன்ஏ-வில் பாதிக்கு மேற்பட்டோர் தமிழர்களாக இருந்தனர். அவர்களில் மேஜர் ஜெனரல் அழகப்பா, கர்னல் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம்,  பிரிகேடியர்கள் நாகரத்தினம், எஸ்.ஏ. ஐயர், ஜான் திவி,  கேப்டன் டாக்டர் லட்சுமி சைகல் போன்றோர் விர உணர்ச்சியுடன் கடமை ஆற்றிக் கொண்டிருந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில் தமிழர்கள் சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்டுவந்த நேதாஜி, மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்தப் பிறவியில் நான் தமிழராகப் பிறக்க விரும்புகிறேன் என்றாராம்.

ஐஎன்ஏ-வில் மலாயா தமிழகத் தமிழர்கள் போர்முனையில் முனைப்பு காட்டிக் கொண்டிருக்க, மலாயா யாழ்ப்பாணத் தமிழர்கள் நிதியை பேரளவில் திரட்டிக் கொடுத்தனர்.

இத்தகைய சூழலில், 2-ஆம் உலகப் போர் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஜப்பானியப் படைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளைக்  கைப்பற்றி நேதாஜியிடம் ஒப்படைத்தனர். உடனே, நேதாஜி ஐஎன்ஏ-வின் கட்டுப்பாட்டுக்குள் அந்தமானைக் கொண்டுவந்து, அந்தத் தீவுப் பிரதேசத்தின் ஆளுநராக லோகநாதன் என்னும் மறத் தமிழரை நியமித்தார்.

ஐஎன்ஏ-வில் துடிப்புடன் செயல்பட்ட டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களுக்கு வயது போதவில்லை என்று கூறி அவரை போர்முனைக்கு அனுப்பவில்லை. அதனால், சிங்கப்பூர்-மலாயாவிலேயேத் தங்கி இராணுவப் பயிற்சி, சீரமைப்பு, ஒழுங்குமுறைப் பணிகளை ஏற்றிருந்தார். அவர், தன்னை-விட வயதில் பெரியவர்களுக்கெல்லாம் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், மத்திய மலாயாவில் முகாமிட்டிருந்தபொழுது, ஒருநாள் மாலை வேளையில் தன்னுடைய தலைமையில் பயிற்சி பெற்று வந்த இராணுவத்தினருடன் சித்தியவான் நகர்ப்பகுதியில் வலம்வந்த நேரத்தில் எதிர்பாராமல் தென்பட்ட ஒரு படக்கடையில் எடுத்துக் கொண்ட நிழற்படம்தான் இது.

படத்தில் அமர்ந்திருக்கும் டான்ஸ்ரீக்கு அருகில் அதே நாற்காலியில் ஒட்டிக்கொண்டு உட்காந்திருக்கும் சிங்காரம் செட்டியாருக்கு டான்ஸ்ரீயைவிட மூன்று வயது அதிகம்; மற்ற இருவரும் ஏறக்குறைய சிங்காரத்தின் வயதுடையவர்கள்.

கூட்டுறவு சங்கம் தொடங்கி முதல் பத்து ஆண்டுகளில் பல்வேறு தடங்கலையும் சிக்கலையும் எதிர்கொண்டுவந்த நேரத்தில், இவர் தலைமை ஏற்றதுடன் இன்று இந்த நிலைக்கு கூட்டுறவு சங்கத்தை செம்மாந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறார். ஆனாலும், மஇகா கெடா மாநிலத் துணைத் தலைவர் பதவியை தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

1945-இல் இந்தப் படம் எடுக்கப்பட்ட நேரத்தில் டான்ஸ்ரீ அவர்களுக்கு 16 வயது.

அந்தமான் தீவைக் கைப்பற்றியபின், ஐஎன்ஏ இந்தியாவை வெற்றி கொள்வதற்குள் போர் முடிந்து விட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேதாஜியும் மர்மமான முறையில் காணாமல் போனார். ஐஎன்ஏ தொடர்ந்து செயல்பட்டிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில் மேஜர் நிலைக்கு டான்ஸ்ரீ உயர்ந்திருப்பார்.

எது எவ்வாறாயினும், இவரின் தலைமைத்துவ ஆற்றல் 15-16 வயதிலேயே வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.