– நக்கீரன் –

தமிழிலக்கிய நெடும்பாட்டையில் புதுக்கவிதை என்னும் புதுப்பாங்கை அறிமுகப்படுத்திய பெருங்கவி பாரதியாருக்கு இன்று(டிசம்பர் 11, 2021) 139-ஆவது பிறந்த நாள்.

எண்ணிய பொருள் கைவசமாக வேண்டும் என்று பாடிய பாரதிக்கு, எதுவுமே கைவசமாகவில்லை;

இந்திய சுதந்திர வேட்கையுடன், பெண்ணடிமை ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி, தமிழர்களின் வர்த்தக முன்னெடுப்பு குறித்தெல்லாம் புதுமைக் கருத்தை புலப்படுத்தி வந்த மாகவி பாரதிக்கு, தமிழன்னையின் அரவணைப்பு ஒன்றுதான் நிறைவாகக் கிட்டியதேத் தவிர மற்ற யாவும் குறைவாகவே வாய்த்தன; அவரின் வாழ்நாளும்கூட அப்படித்தான்.

சுப்பையா (சுப்பிரமணியன்) என்னும் இயற்பெயருடன் பிறந்த பாரதியின் அன்னை இலக்குமி அம்மாள், பாரதிக்கு ஐந்து வயதிருக்கும்போதே இறந்து விட்டதால் பாரதிக்கு தாயன்பில் பஞ்சம் ஏற்பட்டது. பாரதிக்கு ஏற்பட்டு முதல் வறுமை தாய் அன்பு குறைவுதான்.

தொழிலில் ஏற்பட்ட நட்டம் தாங்கமாட்டாமல், தந்தை சின்னசாமியோ பாரதி 16 வயதை எட்டியிருந்த நிலையில் மறைந்ததால், மந்திர சொல் உரைக்கும் தந்தையின் வழிகாட்டலும் அத்துடன் நின்றுபோனது.

ஆங்கில அதிகாரிகளின்கீழ், தன் மகன் சுப்பையா ஒரு தொழில்வல்லானாகத் திகழ வேண்டுமென்று விரும்பிய சின்னசாமி ஐயர், பாரதியை ஆங்கிலமும் கணிதமும் பயில நெல்லை சீமைக்கு அனுப்பிவைத்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு செல்லம்மாள் என்ற சிறுமியை பாரதிக்கு(பதினான்கரை வயது) மணம் முடித்திருந்த நிலையில், தந்தை காட்டிய கல்விப் பாதை பிடிக்காததால் அதையும் பாதியிலேயே விட்ட சூழலில், இடக்கையில் தாளையும் வலக்கையில் எழுதுகோலையும் ஏந்துவதைத் தவிர வேறொன்றும் அறியாத பாரதியின் இல்லத்தில் பொருள் வறுமை சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது.

வறுமையிலும் செம்மை காத்த செல்லம்மாள் துணையாக வாய்த்தது பாரதியார் பெற்ற பெறும்பேறு. சிறு வயது முதலே கல்வி நாட்டமும் இலக்கிய தாயகமும் மிகப் பெற்றிருந்த பாரதியார், அந்தச் சூழ்நிலையிலும் உயர்க்கல்வியை நாடி காசி அலகாபாத் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

அங்கு சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் ஆங்கில கவிமகன் ஷெல்லியின் படைப்புகளின்பால் பாரதிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

E--HhnOVUAETu7n.jpg

அத்துடன் தமிழின் கிளை மொழிகளான தென்னிந்திய மொழிகளிலும் தேர்ந்தார் பாரதி. அதனால்தான், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதியால் பாட முடிந்தது.

ஏழு வயதிலேயே கவிமீது நாட்டம் செலுத்திய பாரதி, 11 வயதில் சிறந்த கவிதைகளை இயற்ற முனைந்தார். இதை அறிந்த எட்டயபுரத்து மன்னர், சுப்பையாவை வரவழைத்து தன்னுடைய புலவர் சபையிலே கொண்டு வந்து நிறுத்தினார். அங்கு பாரதியை சோதித்த புலவர் பெருமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பாரதி என்னும் பெயரையும் சூட்டினர்.

அத்தை குப்பம்மாளின் அரவணைப்புடன் காசியில் நான்கு ஆண்டுகளைக் கழித்த பாரதி எட்டயபுரம் திரும்பியதும் அரசவைக் கவிஞர் ஆனார்.

அந்த காலக்கட்டத்தில் இந்திய விடுதலை வேட்கை நாடெங்கும் பரவியிருந்ததால், பாரதியும் தன்னுடைய பேனா முனையை விடுதலைப் போராட்டத்தின் பக்கம் திருப்பினார். இயல்பாகவே புரட்சி மனப்பான்மை கொண்டிருந்த பாரதியார் திலகர், வஉசி, சுப்பிரமணிய சிவா, பாவேந்தர், அரவிந்தர், சுதேசி பத்மநாபன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற பிராமன சாதி வெறியன் குமரன் உள்ளிட்டோரிடம் நட்பு பாராட்டினார்.

பாரதியாரின் குடும்ப வாழ்க்கை, பத்திரிகை வாழ்க்கை, நட்பு வட்டம் என எதுவுமே நிலையாக இல்லாமல் எல்லாமே மாறிக்கொண்டிருந்தன. வசப்பட்ட அத்தனையும் தொடர்ந்து கைவசம் நிலைக்காமல் நழுவிக் கொண்டே இருந்தன. பாரதியும் அடுத்த நாள் வாழ்க்கையைப் பற்றியோ இந்தப் பொருள் நமக்கு நாளை வேண்டுமே என்றோ ஒருபோதும் எண்ணாதவர். அதனால்தான் மனைவி உலைக்காக வைத்திருந்த கொஞ்ச அரிசியையும் எடுத்து வீட்டு முற்றத்தில் வாரி இறைத்து குருவிகள் உண்பதைப் பார்த்து மகிழ்ந்தார்.

அந்த வகையில், அவருக்கு காலம் தந்த வாழ்நாளும் 39 வயதுடன் நின்றுப்போனது. பாரதியாருடன் அவர் வாழ்ந்த காலமெல்லாம் இணை பிரியாமல் ஒட்டி உறாவாடியவை தாளும் கோலும்தான்.

வாழ்க பாரதியார் புகழ்!