கோலாலம்பூர் | 11/12/2021 :-
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கான அரசின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக மலேசியாவைச் சேர்த்த தமிழர் திரு.சரவணன் சின்னப்பன் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய வைப்பதற்கு, முதலீட்டு துாதர்கள் என்ற பெயரில் ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத் தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் இக்குழுவின் தலைவராகவும், ‘கைடன்ஸ்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர்’ என, கூறப்பட்டுள்ளது.
மேலும், திட்டக்குழு துணைத்தலைவர், தொழில்துறை செயலர் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆறு தமிழ் தொழில் முனைவோர் உட்பட 10 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழு தமிழகத்திற்கான முதலீட்டு ஆலோசனைகளையும் முதலீட்டாளர்களுக்கான வசதிகளையும் செய்து தர அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.