கெட்கோ: கைதான நபருக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்!

0
4

சிரம்பான், செப். 20- 
அண்மையில் கெட்கோ நில விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட 69 வயதுதக்க நபரை 5 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சம்பந்தப்பட்ட நபரை தடுப்பு காவலில் வைப்பதற்கான அனுமதியை பெறும் மனுவை அந்த ஆணையம் இன்று காலை புத்ராஜெயாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சித்தி நபிலா ரஷிட் அவரை வரும் 5 நாட்களுக்குத் தடுப்புக் காவவில் வைப்பதற்கு அனுமதி வழங்கினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் அந்த முக்கிய நபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சூல்கிப்ளி அகமட் கூறினார்.

கடந்த 1977ஆம் ஆண்டு 1,500 ஹெக்டர் நிலப்பரப்பில் 2017ஆம் தேதி தொடங்கப்பட்ட கெட்கோ நிலத் திட்டத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டறிய தாம் விசாரணையைத் தொடக்கப் போவதாக கடந்த 27.8.2017ஆம் தேதி சூல்கிப்ளி கூறினார். கடந்த 1977ஆம் ஆண்டு கெட்கோ நிறுவனம் தனியார் நிறுவனமாக்கப்பட்டது முதல் அந்த நில திட்டத்தில் பங்கு பெற்றவர்களின் நிலை கேள்விக்குறியானது. இந்நிறுவனம் கெட்கோ தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் அமைக்கப்பட்டது. அந்நிலம் 99 ஆண்டுகள் குத்தகை முறையில் நெகிரி செம்பிலான் மாநில மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து வாங்கப்பட்டது. அப்போது அந்நிலத்திட்டத்தில் ஒவ்வொரு பங்குதாரரும் 7,600 வெள்ளியை முன்பணமாகச் செலுத்தினர்.

கெட்கோ திவாலானதைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. பிறகு அந்நிறுவனம் கடந்த 2007ஆம் ஆண்டு தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டபோது அது பெரும் சர்ச்சையானது. அந்நிலம் 50 கோடி வெள்ளிக்கு மதிப்பு கொண்டிருந்த வேளையில், அது வெறும் ஒரு கோடியே 60 லட்சம் வெள்ளிக்கு மட்டுமே தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக அந்நிலக் குடியேற்றக்காரர்கள் குற்றம் சாட்டினர். இவ்விவகாரத்தை பாதிக்கப்பட்ட குடியேற்றக்காரர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கொண்டு சென்ற பிறகு அந்த ஆடவரை அந்த ஆணையம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.