வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இளம் விளையாட்டாளர்களை உருவாக்க‘மில்லியன் டாலர் பீட்’
விளையாட்டு

இளம் விளையாட்டாளர்களை உருவாக்க‘மில்லியன் டாலர் பீட்’

கோலாலம்பூர், செப். 20-

இளம் விளையாட்டாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் நாடு முழுவதிலும் காற்பந்து விளையாட்டாளர்களின் திறன்களை கண்டறிவதற்காக இங்கிலாந்து பிரிமியர் லீக்கைச் சேர்ந்த ஸ்டீவ் மேக் மஹோன் தலைமையில் மில்லியன் டாலர் பீட் குழுவினர் ஈடுபடவிருக்கின்றனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இவ்வாண்டும் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்படுவதாக இங்கிலாந்து காற்பந்து குழுவின் முன்னாள் நிர்வாகியும் விளையாட்டாளருமான சேம் அலெட்சி தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மில்லியன் டாலர் பீட் அறிமுக விழாவில் முன்னாள் லிவர்புல் நட்சத்திரம் ஸ்டீவ் மேக் மஹோன், இந்த நிகழ்வின் அமைப்பாளரும் இயக்குநருமான பீட்டர் டே கிரிட்ஸர், பாபாஸின் விளம்பரம் மற்றும் அறிமுகப் பிரிவின் தலைவர் கிளான்டியன் நவின் ஸ்டேனிலவுஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது பயிற்சி திட்டத்தில் அடாம் ரோஷான் கிரிஸ் அஸ்மானும் சரவாக்கைச் சேர்ந்த முகமட் யுஸ்ரி அஷிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரிட்டனில் காற்பந்து பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர். இவ்விருவருக்கும் ஐரோப்பாவின் முன்னணி காற்பந்து அகாடெமியில் 2 ஆண்டு கால கல்வி உபகார சம்பளமும் வழங்கப்பட்டது. புருக் ஹாவ்ஸ் ஆப் காற்பந்து பயிற்சி நிலையத்தில் 10 லட்சம் வெள்ளி தொகையிலான உபகாரச் சம்பள திட்டத்தின் கீழ் அவ்விருவரும் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

காற்பந்து உலகில் தீவிர ஈடுபாடு காட்டிவரும் முன்னணி நாடுகள் இளைஞர் மேம்பாட்டு திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. காற்பந்து விளையாட்டு உலகளாவிய நிலையில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் பிரிமியர் லீக் போட்டிகளில் மலேசியர்கள் முன்னணி கிளப்புகளில் விளையாட முடியும் என தாம் நம்புவதாக இங்கிலாந்து குழுவின் முன்னாள் நிர்வாகியுமான சேம் எலட்சி கூறினார். இந்தத் திட்டம் தென்கிழக்காசியாவிலிருந்து தொடர்வதை நாங்கள் காண விரும்புகிறோம். இதன் காரணமாகவே மில்லியன் டாலர் பீட் பயிற்சி திட்டத்திற்கு நாங்கள் முழுமையாக ஆதரவு வழங்குகிறோம் என அவர் சொன்னார்.

கடந்த ஆண்டை போலவே மில்லியன் டாலர் பீட் பயிற்சி திட்டத்தின் கீழ் மலேசியாவிலுள்ள 11 முதல் 16 வயதுடைய பதின்ம வயதினர் பங்கேற்கலாம். அனைத்து மலேசியர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் பொருட்டு பினாங்கில் அக்டோபர் 7,8ஆம் தேதியிலும் சரவாக்கில் அக்டோபர் 13, 14ஆம் தேதிகளிலும், கிளந்தானில் அக்டோபர் 20,21ஆம் தேதிகளிலும் ஜோகூரில் 27,28ஆம் தேதிகளிலும் கோலாலம்பூரில் 3,4ஆம் தேதிகளிலும் இறுதியாக 5ஆம் தேதியும் இந்த பயிற்சி நடைபெறும். கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் 10,000க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டாளர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்பார்கள் என பீட்டர் டே கிரிட்ஸர் கூறினார்.

சிறந்த விளையாட்டாளராக தேர்வு செய்யப்படும் இருவர் பிரிட்டனுக்கு செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு அங்குள்ள முன்னணி கிளப்களில் பயிற்சியை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படும். அடாம் மற்றும் யுஸ்ரியை பின்பற்றி இதர இளம் விளையாட்டாளர்களும் தங்களது கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மேக் மஹோன் கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு 11 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாண்டும் 11 முதல் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேக் மஹோன் தெரிவித்தார். மலேசியர்கள் சிறந்த ஆற்றலை கொண்டிருக்கின்றனர். சரியான வாய்ப்புகளும் தளம் மற்றும் பயிற்சியும் அமையுமானால் அவர்கள் ஐரோப்பாவின் முன்னணி காற்பந்து போட்டிகளில் விளையாட முடியும் என மேக் மஹோன் கூறினார்.

மில்லியன் டாலர் பீட் பயிற்சி திட்டத்திற்கு கல்வி அமைச்சு, கோலாலம்பூரில் உள்ள மலேசியா மற்றும் பிரிட்டிஷ் தூதரகத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவை பெற்று வருகிறது. இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் பயிற்சியை மலேசியாவின் முன்னணி மசாலைப் பொருட்களின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பாபாஸ் ஏற்பாட்டாளராகத் திகழ்கிறது. 40 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் பாபாஸ், மலேசியா முழுவதிலும் உள்ள இல்லங்களில் பிரபலமான அறிமுகப் பொருளாக திகழ்கிறது. மேலும், பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி, இக்திஹாட் ஏர்வேய்ஸ், திஜிவி திரையரங்குகள், தேசிய சிறுநீரக அறநிறுவனம், அனிதா, எல்.ஏ.சி. பிரிண்டிங், 100 பிளஸ் ஆகிய நிறுவனங்களும் ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள இளம் விளையாட்டாளர்கள் www.milliondollarfeet.com என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன