ஷா ஆலாம் | 22/12/2021 :-
கிள்ளான் பள்ளத்தாக்கில், குறிப்பாக ஷாலம் ஸ்ரீ மூடா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடரில் சிக்கிய பொது மக்களை மீட்பதிலும் தேவையான அவசர உதவி அளிப்பதிலும் மலேசிய முன்னேற்றக் கட்சி (ஏம்ஏபி) சிலாங்கூர் மாநிலப் பொறுப்பாளர்கள் இரவு பகலாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

கடந்த வாரக் கடைசியில் பெய்த அடைமழையின் காரணமாக சிலாங்கூர் கிள்ளான் பள்ளத்தாக்கு, பகாங், திரங்கானு, கிளந்தான் மாநிலங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஷா ஆலம், ஸ்ரீ முடா பகுதியைப் பொறுத்தவரை அதிகமான அரசுசார அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் மிகுந்த ஈடுபாட்டுடனும் சமூக அக்கறையுடனும் பொதுமக்களுக்கு உதவினர்.

அந்த வகையில், சிலாங்கூர் மாநில ஏம்ஏபி பொறுப்பாளர்களும் அதன் தலைவர் முனைவர் அ.குமரன் ஒருங்கிணைப்பில் துணைத்தலைவர் சி.எஃப். மணிமாறன் தலைமையில் படகு மூலம் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த மக்களை மீட்டு, பாதுகாப்பு முகாம்களில் அவர்களை பத்திரமாக சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஏம்ஏபி கட்சியினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இரவு பகலாக தொடர்ந்து இப்பணியை மேற்கொண்டனர்.

இந்த அரிய சேவைக்கு தஞ்சோங் சிப்பாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான குகேந்திரன் மனோகர் இயந்திர படகை வழங்கி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

