கோலாலம்பூர் | 26/12/2021 :-
ஆறாத வடுவை ஏற்படுத்திய ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இன்றலிரங்கல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் கடந்த 2004-ம் ஆண்டு திசம்பர் 26-ந் தேதி சுனாமி பேரலை தாக்கியது. தமிழகம், இலங்கை, மலேசியா வரை அதன் தாக்கம் இருந்தது.
ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி நினைவு நாளன்று ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்பட்டக் கடற்கரைப் பகுதிகளில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படுகிறது.
சுனாமி என்ற அந்த ஆழிப்பேரலை அந்த வயதில் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றே சொல்லலாம்.
அது கிறிஸ்துமஸுக்கு அடுத்த தினம்; மேலும் அது ஒரு விடுமுறை தினம். ஆனால், வழக்கமான விடுமுறை நாளில் எழும் மகிழ்ச்சிக்கு மாறாக அந்த நாள் துயரமாக மாறிப் போனது.
கொத்து கொத்தாய் மக்கள் கொல்லப்பட்டதும், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் எழுந்த அழுகை குரல்கள் என திரும்ப திரும்ப தொலைக்காட்சி ஊடகங்களில் கண்ட காட்சிகள் பாதிக்கப்படாதப் பகுதிகளில் இருக்கும் பலரது மனதில் மீண்டும் ஒரு சுனாமியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
அதுவரை அமைதியான கடலை மட்டுமே கண்ட நமது கண்கள் சுனாமிக்கு பிறகு கடல் சீற்றம் கொண்டு ஆடுவதுபோல் மிரட்சியை ஏற்படுத்தியது.
சுனாமி முடிந்த பின்னும் பல நாட்களுக்கு வதந்தியாகவும், உண்மையாகவும் வந்த சுனாமி எச்சரிக்கைகளும் பெரும் பீதியை கிளப்பிக்கொண்டேதான் இருந்தது.
சுனாமியால் நேரடியாகப் பாதிக்கப்படாதவருக்குக் கூடநேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அழுகையையும், உறவுகள், உடமைகள் என அனைத்தும் இழந்த அந்த மக்களின் கண்ணீர் கதைகளை எத்தனை வருடங்கள் கழித்து நினைத்து பார்த்தாலும் கண்களில் தன்னை அறியாமல் கண்ணீர் வந்து செல்கிறது என்பதே உண்மை.