புடுராயா கோட்டுமலை அருகே சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி அறிமுகம்

கோலாலம்பூர், செப். 21-

புடுராயாவில் பிரசித்திபெற்ற கோட்டுமலை விநாயகர் ஆலயத்தின் அருகில் சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி புதிதாக அறிமுகம் கண்டுள்ளது. இதனை மேலவைத் தலைவரும் ம.இ.கா. உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இக்கால சூழ்நிலையில் இந்தியர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள பல்வேறான துறைகளில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் சவாலான துறைகளை கையில் எடுப்பது, மிகவும் குறைவுதான் அந்த வகையில் சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதியின் உரிமையாளர் டத்தோ சண்முகநாதனை நிச்சயம் பாராட்ட வேண்டுமென டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

குறிப்பாக சவாலான துறையில் காலடி எடுத்து வைத்ததோடு அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். இது எதிர்கால சமுதாயத்தினருக்கு நிச்சயம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குமென்றும் அவர் குறிப்பிட்டார், ஒரு துறையில் ஈடுபடும் போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அதனை சமாளிக்க முடியாமல், பலர் அந்த திட்டத்தைப் பாதியில் கைவிட்டு விடுவார்கள்.

ஆனால் டத்தோ சண்முகநாதனை பொறுத்தவரையில் அனைத்து சவால்களையும் கடந்து இன்று வாழ்க்கையில் தம்மை மேம்படுத்திக் கொண்டுள்ளார். இவரைப் போல நமது சமுதாய இளைஞர்களும் சாதிக்க வேண்டுமென டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

6 மாடிகள் கொண்ட இந்த சிக்னெச்சர் இண்டாநேஷனல் தங்கும் விடுதியில் 130 அறைகள் உள்ளன. இதன் ஒரு நாள் வாடகை ரிம 110 வெள்ளியிலிருந்து ரிம 220 வெள்ளி வரை வசூலிக்கப்படுகின்றது. குறிப்பாக பிரத்தியேக கூட்டங்களை நடத்துவதற்கு 3 அறைகளும் ஒரு மாநாட்டு மண்டபமும் சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதியில் உள்ளது.

இந்த மாநாட்டு மண்டபத்தில் 700 பேர் அமரலாம். அதோடு சிறப்பு கூட்டங்களை நடத்துவதற்கு 150 பேர், 90 பேர் மற்றும் 50 பேர் அமரக்கூடிய அறைகளும் இங்கு உள்ளன. இந்த தங்கும் விடுதி 4 மாதங்களுக்கு முன்பு செயல்படத்தொடங்கினாலும், அதிகாரப்பூர்வமாக நேற்றுதான் தொடங்கப்பட்டது.

தற்போது வரை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் ஆதரவு சிறப்பாக உள்ளதாக சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி உரிமையாளர் டத்தோ சண்முகநாதன் கூறினார். தீபாவளி வரை அனைத்து பதிவுகளுக்கும் 20 விழுக்காடு கழிவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடக்கவிழாவில், டான்ஸ்ரீ வீரசிங்கம், டத்தோ டி. மோகன் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.