கோலாலம்பூர், செப். 21-

நம் சமுதாய மாணவர்களுக்கு கல்வி ஒன்றுதான் நல்ல எதிர்காலத்தைக் கொண்டு வரும். அதனைக் கருத்தில் கொண்டு எம்ஐஇடி எனப்படும் மாஜூ கல்வி மேம்பாட்டுக் கழகம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகின்றது என இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத்துறை சிறப்புத் தூதரும் எம்ஐஇடியின் தலைவருமான துன் டாக்டர் ச.சாமிவேலு தெரிவித்தார்.

கடந்த 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எம்ஐஇடி நிறுவனம் இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே தனியார் கல்விக் கடன் நிறுவனமாகச் செயலாற்றி வருகிறது என நேற்று தலைநகரில் நடைபெற்ற மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், இந்த ஆண்டு முதல் முறையாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கல்வியில் சிறந்த மற்றும் ஏழை மாணவர்களான 24 பேருக்கு எம்ஐஇடி நிறுவனம் மொத்தம் வெ.12 லட்சம் உபகாரச் சம்பளமாக வழங்கியது. இவர்களில் 18 மாணவர்கள் மருத்துவத் துறையிலும், 2 மாணவர்கள் பல் மருத்துவத் துறையிலும் உள்ளவர்கள். இதர மாணவர்கள் பல்வேறு கல்வித்துறைகளைச் சேர்ந்தவர்கள்.

இதனை தொடர்ந்து, ஏய்ம்ஸ்ட் உட்பட மேலும் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 504 மாணவர்களுக்கும் மொத்தம் வெ.52 லட்சம் கல்விக் கடனுதவியாகப் பெற்றனர். இவர்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் மட்டும் மிக அதிகமான கடனுதவியாக 3.2 மில்லியன் ரிங்கிட்டை பெறுள்ளனர். இரண்டாவது நிலையில், பல் மருத்துவம் பயிலும் 48 மாணவர்கள், வெ. 5 லட்சத்து 81 ஆயிரம் பெற்றுள்ளனர். மூன்றாவது நிலையில் பொறியியல் பயிலும் 37 மாணவர்கள், வெ. 2 லட்சத்து 92 ஆயிரம் பெற்றுள்ளனர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நிதிச் சிக்கலை எதிர்நோக்கும்போது, அவர்களுக்கு எம்ஐஇடி தொடர்ந்து உதவி செய்து, தனது நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது. இதுவரையில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு வெ.1 கோடியே 41 லட்சம் கடனாக வழங்கியுள்ளது. கல்வி கற்ற ஒருவர், தன்னையும், தனது சமூகத்தைச் சேர்ந்துள்ளவர்களையும் வடிவு அமைக்கும் திறன் பெற்றவராக இருப்பார் என்பது மறக்க முடியாத உண்மை. சிறந்த கல்வி மற்றும் சிறந்த பயிற்சி பெற்ற ஒருவருக்கு நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

தரமான கல்வியினை வழங்குவது மற்றும் உயர்கல்விக்கு கடனுதவி வழங்கி மாணவர்களின் கனவுகளை நனவாக்குவது ஆகியவற்றினை எம்ஐஇடி என்றுமே தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது என துன் சாமிவேலு மேலும் கூறினார். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் ஆற்றிவரும் பங்கு அளப்பெரியதாகும். அவர்களின் உயர்வுக்காக பெற்றோர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி, தியாகம், சிரமங்கள் அனைத்தும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. அதே வேளையில், நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த எம்ஐஇடி நிர்வாகப் பணியாளர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், மேலவைத் தலைவர் செனட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், எம்ஐஇடி தலைமை செயல்முறை அதிகாரி மும்தாஜ் பேகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், ம.இ.கா உதவித் தலைவர்களான டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன் டான்ஸ்ரீ டாக்டர் மாரிமுத்து, டான்ஸ்ரீ ஜி.வடிவேலு, டான்ஸ்ரீ வீரசிங்கம், டத்தோ அசோகன், டத்தோ எல்.கிருஷ்ணன், டத்தோ ராகவன், உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.