கோலாலம்பூர் | 27/1/2022 : –

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசின் மிக உரிய விருதான ‘தமிழ்த்தாய்’ விருது வழங்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் பெ.இராஜேந்திரன் அவர்களின் தொடர் முன்னெடுப்புகளின் வழி உலகளாவிய நிலையில் சங்கம் சிறந்த அமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய இடைவிடாத பணிகளின் மூலம் சங்கத்திற்கு திரு.பெ.இராஜேந்திரன் ஈட்டித் தந்திருக்கும் இந்த “தமிழ்த் தாய்” விருது மிகப்பெரிய கிரீடமாகும் என்று இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

சென்னையில் நேற்று ஜனவரி 25ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு விருதாளர்கள் பட்டியலை அறிவித்த போது, சிறந்த தமிழ் அமைப்புக்கான விருதான
‘தமிழ்த் தாய்’ விருது இவ்வாண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த வேளையில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் அதன் தலைவர் திருவாளர் பெ.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது வாழ்த்து செய்தியில் சொன்னார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு இந்த “தமிழ்த் தாய்” விருது மிகவும் பொருத்தமான விருதாகும். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தை இந்தியா உப்பட உலகளவிற்கு கொண்டு சென்ற பெருமை அதன் தலைவர் ராஜேந்திரன் அவர்களையே சாரும் என்றால் அது மிகையில்லை. சங்கத்தை வழிநடத்துவது சாதாரண காரியமல்ல. அதனை செம்மையாக செய்தவர் ராஜேந்திரன். இதன் காரணமாகவே இந்த “தமிழ்த் தாய்” விருது வழங்கப்பட்டுள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த தமிழ்த் தாய் விருது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த விருதுக்கு ஐந்து இலட்சம் ரூபாயுடன், கேடயம், தகுதியுரை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். தமிழ்த் தாய் விருது பெற்றுள்ள மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் அதன் தலைவர் ராஜேந்திரனுக்கும் உறுப்பினர்களுக்கும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசு வழங்கும் இரண்டாவது விருது இதுவாகும். கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகின் சிறந்த இலக்கியச் சேவையாளருக்கான விருது ராஜேந்திரனுக்கு இலட்சம் ரூபாயுடன் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.